தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுக கொடியில் தாமரை சின்னம்! மதுரை மாநாடு அதிமுகவுக்கு திருப்புமுனை தருமா?

ADMK Madurai conference: ஒவ்வொரு பிரம்மாண்ட மாநாடுகளுக்குப் பிறகு அரசியலில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் அதிமுக, இந்த முறையும் அந்த வரலாற்றைப் படைக்குமா என எதிர்பார்க்க தோன்றுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் புதிய எழுச்சியை அதிமுக காணுமா? - அது குறித்த சிறப்புத் தொகுப்பு.

ADMK Madurai conference meeting
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு

By

Published : Aug 19, 2023, 7:26 AM IST

Updated : Aug 19, 2023, 9:15 AM IST

மதுரை:தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கு இடையிலான துருவ அரசியலாகவே மையம் கொண்டுள்ள நிலையில், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மட்டுமே முன்னிறுத்திய திராவிட பிம்ப அரசியலின் தொடர்ச்சியாக அவர்களின் வாரிசுகளான ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என்று மாற்றம் கண்டுள்ளது.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரசும், வலுவான சட்டமன்ற எதிர்க்கட்சியாய்த் திகழ்ந்த கம்யூனிஸ்ட்டும் இப்போது இரு திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை தொற்றிக் கொண்டு பயணிக்கும் படிக்கட்டு பயணிகளாகிவிட்டன. தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களில் ஏறக்குறைய சரிபாதி திமுக, அதிமுக கட்சிகளுக்கு தான் என்றாலும் கூட, அந்த வாக்கு வங்கியில் சற்று முன்னணியில் இருப்பது இப்போதும் அதிமுகதான் என்பதே புள்ளி விபரங்கள் சுட்டும் உண்மை.

2 திராவிட கட்சிகள் கோலோச்சும் தமிழ்நாடு :ஆளும் கட்சியாக இருக்கும் போது இந்த இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று இழைக்கும் தவறுதான், மற்றொரு கட்சிக்கான வெற்றி வாய்ப்பாக மாறுவது தமிழ்நாடு மட்டுமே காணும் அதிசயம். திமுக, அதிமுக என்ற 2 திராவிட பெருங்கட்சிகள் தமிழக மண்ணில் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் பல ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதுதான் இன்றைய எதார்த்தமான உண்மை. இந்நிலையில் அதிமுக மற்றொரு மாநாட்டின் மூலமாக தன்னுடைய அரசியல் பாய்ச்சலை மதுரையில் தொடங்க இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி, மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளத்தில் தனது லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தான் என்கிற புதிய கணக்கை தொடங்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட நிர்வாகிகளின் சுறுசுறுப்பால் மாநாட்டு ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

தடபுடலாக தயாராகும் மதுரை மாநாடு : தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகிற தொண்டர்களுக்காக 3 வேளையும் சமைப்பதற்கான சமையல் ஆட்கள் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்றால், வரப்போகும் தொண்டர்களின் எண்ணிக்கையை ஒருவாறு ஊகித்து அறியலாம். சுமார் 10 லட்சம் நபர்கள் வரை வரலாம் என்பது அக்கட்சியினரின் கணக்கு. பொதுவாக அதிமுக என்ற கட்சியின் வளர்ச்சிக்கு உரைகல்லாக மதுரைதான் இருந்து வருகிறது.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போது வரை அதுதான் நிதர்சனம். எம்ஜிஆர் திமுகவிலிருந்து வெளியேறியதும், தனிக்கட்சி தொடங்க வலியுறுத்திய குரல்கள் மதுரையில் இருந்து தான் முதன்முதலாக எழுந்தன. அச்சமயம் அவரது ஆதரவாளர்கள் ஒன்றுகூடி மதுரை நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஜான்சிராணி பூங்காவில் கட்சிக் கொடி ஒன்றையும்கூட அறிமுகம் செய்தனர்.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுக கொடியில் தாமரை சின்னம் :திமுகவின் கருப்பு - சிவப்பு கொடியின் நடுவே தாமரைப்பூ இடம் பெறும் வகையில் அந்த பூங்கா வளாகத்தில் ஏற்றப்பட்ட கொடி அச்சமயம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது கூட்டணி என்ற வகையில் அதிமுக கொடியோடு பாஜகவின் தாமரைக் கொடியும் இணைந்திருப்பது வரலாற்று அதிசயம். மதுரையில் எம்ஜிஆரின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியிலும் எம்ஜிஆரின் செல்வாக்கு முழுவீச்சை அடைந்தது. இதுவே கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியாக மாறி, எம்ஜிஆர் தலைமையிலான தமிழக அரசை அதிமுக அமைக்க காரணமாக அமைந்தது. அதிமுக உருவான பின்னர், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றாலும், அதற்கு அடுத்து 1980-ல் மதுரை மேற்கிலும், 1984-ல் அப்போதைய மதுரை மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டியில் இருந்தும் தான் எம்ஜிஆர் சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

தென் மாவட்டங்கள் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு :அதே வரிசையில் ஜெயலலிதாவும், அதிமுகவை வளர்ப்பதற்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களையே மிகவும் நம்பியிருந்தார். இதுகுறித்து எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் மதுரையைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "எம்ஜிஆருக்கு எப்போதுமே தென்மாவட்டங்கள் மீதும் குறிப்பாக மதுரை மீது அழுத்தமான பார்வை இருந்தது.

மதுரை மேற்குத் தொகுதியில் அவர் வென்ற அந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகுதான் மதுரையில் 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டை கடந்த 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தினார். இத்தனைக்கும் அக்குறிப்பிட்ட மாநாடு அந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எம்ஜிஆர் இதில் தலையிட்டு, தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் நடத்துவதற்கு சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பிடம் அனுமதி கோரி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

முதன்மைத்துவம் பெற்ற ஜெயலலிதா :அப்போதுதான் மதுரையில் உலகத் தமிழ் சங்கமும், தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகமும் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவுக்கு மாநாட்டுப் பணிகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு, எம்ஜிஆரால் அவர் முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டதும் அப்போதுதான். அதேபோன்று கடந்த 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஜிஆர் மன்ற மாநாடு, அதிமுக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

இந்த மாநாட்டில்தான் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆருக்கு அவரது தொண்டர் முருகமணி என்பவரால் வழங்கப்பட்ட வெள்ளிச் செங்கோலை ஜெயலலிதாவுக்கு வழங்கினார். செங்கோலைப் பெற்ற ஜெயலலிதா எம்ஜிஆரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திற்கான அச்சாரமாகவே அப்போது அனைவராலும் பார்க்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் பாணியில் ஜெயலலிதா : இதற்கு பிறகுதான் ஜெயலலிதா தமிழக அரசியல் களத்தில் கடுமையான பல எதிர்ப்புகளுக்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வளர்த்தெடுத்தார். எம்ஜிஆருக்குப் பிறகு தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில் அவரது அசாத்தியமான துணிச்சல் வியப்பிற்குரியது. எம்ஜிஆர் போட்டியிட்ட அதே ஆண்டிப்பட்டியைத் தேர்வு செய்து வென்று காட்டினார்.

அதிமுகவின் பல்வேறு கால கட்ட வளர்ச்சியோடு மதுரை மிகவும் பின்னிப் பிணைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது எடப்பாடி பழனிசாமி, 'வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு' என தலைப்பிட்டு, அதிமுகவின் பிரம்மாண்ட மாநாட்டை மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடத்த இருக்கிறார். இதுவரை நடைபெற்ற அதிமுக மாநாடுகளுக்கும், தற்போது நடைபெற உள்ள மாநாட்டிற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

முதல் முறையாக எதிர்க்கட்சியாக மாநாடு :அதிமுக மதுரையில் மாநாடு நடத்தும்போதெல்லாம் அது ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள நேரத்தில் நடைபெறும் இந்த மாநாடு, அதிமுகவின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள 51 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 இடங்களிலும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தென் மாவட்டங்களில் அதிமுகவின் சரிவு, அக்கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். இந்நிலையில் தான் அந்த ஆதரவை மீண்டும் ஈடுகட்டுவதற்கும், கூட்டுத் தலைமையின்றி தன்னுடைய ஒரே தலைமையின் கீழ் அதிமுகவைக் கொண்டு வருவதற்குமான ஒரு வாய்ப்பாகவே இந்த மாநாட்டை எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.

பாஜகவை திணறடிக்குமா மதுரை மாநாடு :மேலும் தங்களுடைய கூட்டணியில் உள்ள பாஜக, வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வழங்குகின்ற சீட்டைத் தவிர்த்து கூடுதலாகக் கேட்கிற பேர வாய்ப்பினை தகர்ப்பதற்கும், தங்களை விட்டால் பாஜகவுக்கு இங்கு நாதியில்லை என்ற உளவியல் நெருக்கடியைத் தருவதற்கும் இந்த மாநாட்டைப் பயன்படுத்துவதாக அக்கட்சியைச் சேர்ந்த மற்றொரு தென் மாவட்ட நிர்வாகி கூறுகிறார். மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என்ற 3 கத்திகள் தன் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருப்பதையும் எடப்பாடி பழனிசாமி நன்றாகவே உணர்ந்து உள்ளார்.

இந்நிலையில் இந்த மூவரும் இல்லாமலே அதிமுக என்ற கட்சி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து பேராற்றல்தான் என்பதை மக்கள் மன்றம் முன்பாக நிரூபித்தாக வேண்டிய கட்டாயமும் ஈபிஎஸ்க்கு இருக்கிறது. பல்வேறு சட்டப் போராட்டங்கள் வாயிலாக அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களிடம் தனது இருப்பையும் காட்டியாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது.

இருப்பை காட்டும் நிர்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி :ஆகையால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமான காரணியாக இருந்தாலும் அதைவிட, அந்த தேர்தலுக்குள் தன்னுடைய தலைமையின் அத்தியாவசியத்தையும் எல்லோருக்கும் உணர்த்துவதற்கான ஒரு உரைகல்லாக அதிமுக மாநாட்டை எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார் என்பதே உண்மை என்கிறார் எம்ஜிஆர் காலத்திலிருந்து ஊடகப்பணியாற்றி வரும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்திய அதிமுக என்ற இந்தக் கட்சி தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், நடைபெறவுள்ள இந்த மாநாடு திருப்புமுனையைத் தருகிறதோ!.. இல்லையோ!.. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு தொண்டர்கள் தரக்கூடிய சான்றிதழாக அமையவே வாய்ப்புகள் அதிகம்.

இதுவரை எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் நடைபெற்ற மாநாடுகள் அனைத்தும் அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்தின. ஆனால் இந்த மாநாடு அரசியல் களத்தில் மட்டுமன்றி, அதிமுகவிலே கூட பல அதிர்வுகளை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "வாங்க மதுரைக்கு உல்லாச பயணம் போகலாம்.. மாநாட்டிற்கு ஆட்கள் திரட்டும் அதிமுக" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

Last Updated : Aug 19, 2023, 9:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details