மதுரை:'அழிவிலிருந்து ஆசியக் கழுகுகளை காக்கும்' சேவ் (Saving Asia's Vultures from Extinction) என்ற அமைப்பின் சார்பாக கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி நேபாள நாட்டின் நவல்பூரில் நடைபெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து கோவை அருளகம் அமைப்பின் சார்பாக தமிழக காட்டுயிர் வாரிய உறுப்பினரும், பாறு கழுகுகள் பாதுகாப்புக்குழு உறுப்பினருமான சு.பாரதிதாசன் கலந்து கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில்,"பாறு கழுகுகள் என சங்க இலக்கியங்களிலும், பழங்குடி மக்களாலும் வழங்கப்பட்டு வரும் பிணந்தின்னிக் கழுகுகள் தற்போது பேரழிவு அபாயத்தில் சிக்கியுள்ளன. அவற்றை அழிவிலிருந்து மீட்பதற்காக என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் அருளகமும் இணைந்து செயலாற்றி வருகிறது. ஒவ்வோராண்டும் பாறு கழுகுகளை காப்பாற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் வெவ்வேறு நாடுகளில் நடைபெறுவது வழக்கம். இந்த முறை நேபாளத்தின் தலைவர் காத்மண்டில் 12 ஆவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக அங்குள்ள சித்பவன் தேசிய பூங்காவிலும் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அருகமை நாடுகளான, சிங்கப்பூர், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவற்றோடு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 45-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் தென்னிந்தியாவிலிருந்து அருளகமும், சலீம்அலி பறவையியல் ஆய்வு மையமும் மட்டுமே கலந்து கொண்டன. இக்கலந்துரையாடலில் அருளகம் சார்பாக என்னையும் பேச அழைத்திருந்தனர்.
கழுகுகளைக் கொல்லும் மருந்துகள்:கழுகுகளுக்கு கேடு பயக்கும் மருந்துகள் என அறிவியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட கீட்டோபுருஃபென், ஃப்லுநிக்ஸின் மருந்துகள் தமிழ்நாட்டு அரசின் கால்நடை மருத்துவத்துறையிலிருந்து விலக்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான மாற்று மருந்துகள் மட்டுமே தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கொள்கை முடிவு ஏற்படுவதற்கான முக்கியக் காரணி, அருளகம் பாறு கழுகுகளின் இறப்பு குறித்து மேற்கொண்ட களப்பணிகள்தான். இதன் அடிப்படையில் நேபாள கலந்துரையாடலில் என்னையும் பேச அழைத்திருந்தனர். இந்த அனுபவங்கள் அனைத்தையும் நான் அங்கு பகிர்ந்து கொண்டேன். மேலும் பல்வேறு நாடுகளில் பாறு கழுகுகளைப் பாதுகாப்பதற்காக நடைபெற்றும் வரும் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.
ஜிபிஎஸ் கருவி:பாறு கழுகு மிக இயல்பாக 200 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று திரும்பக்கூடிய ஆற்றல் படைத்ததாகும். இதற்காக அனைத்து நாடுகளிலும் ஜிபிஎஸ் பொருத்தி ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேபாள நாட்டில் விடப்பட்ட பாறு கழுகு ஒன்று, பாகிஸ்தான் எல்லைப்புறம் வரை பறந்து சென்று திரும்பியதை நாங்கள் உணர்ந்தோம். இதேபோன்று தமிழகத்திலும் இப்பறவைகள் எங்கு இரை தேடச் செல்கின்றன என்பது குறித்த விபரங்களை அறிய ஜிபிஎஸ் பயன்படுத்தும் முறையை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.