மதுரை: பீகார் மாநில உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரியும் இராமநாதபுரத்தை சேர்ந்த சக்திவேல் முருகன் வரதட்சணை கேட்டதால், மனைவி தற்கொலை செய்து கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் முருகன். இவர் பீகார் மாநில உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சக்திவேல் முருகனுக்கும், தாமரைச் செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணமானது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சக்திவேல் முருகனுக்கு திருமணத்தின் போது பெண் வீட்டார் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக கொடுத்து உள்ளனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகு மேலும் நகை மற்றும் பணம் கேட்டு சக்திவேல் முருகன் குடும்பத்தினர் தாமரைச் செல்வி மற்றும் அவரது பெற்றோரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு சக்திவேல் பெற்றோர் தாமரைச் செல்வியை அவர் வீட்டில் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சக்திவேலிடம், தாமரைச் செல்வியை அழைத்துச்செல்லுமாறு அவரின் பெற்றோர்கள் தரப்பில் கூறிய போது நகை மற்றும் பணம் கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என சக்திவேலின் பெற்றோர்கள் கூறியதால் இதுகுறித்து காவல்துறையில் மே மாதம் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் பிரச்சனை மேலும் அதிகமானதால் சக்திவேல் மற்றும் பெற்றோர் தாமரைச் செல்வியுடன் சண்டையிட்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தாமரை செல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தாமரைச் செல்வியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சக்திவேல் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதனை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட சக்திவேல் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோட்டாசியர் அறிக்கை உள்ளிட்ட விவரங்களை பார்வையிட்ட, நீதிபதி சக்திவேல் முருகனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மறு உத்தரவு வரும் வரை, கமுதி காவல் நிலையத்தில் நாள் தோறும் காலை கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பிரபல ரவுடியின் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்கள் கைது!