மதுரை:சங்கரன்கோவில் அருகே உள்ள சில்லிகுளம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மணிமுத்தாறு பட்டாலியன் காவலராக பணியாற்றி வருகிறார் . இவர் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நேற்று (டிச. 03) பட்டப்பகலில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த (நரி குறவர்) பெண்களிடம் பணம் கொடுக்கிறேன் என்னுடன் வா என்று குடிபோதையில் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரிடமிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்றி உள்ளனர். இந்த சம்பவம் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியானது.
இதனை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, காவல்துறையினர் இது போன்ற பொது இடங்களில் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்று அநாகரீகமாக நடந்துகொண்ட காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் இது போன்று சம்பவங்கள் சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் வருகின்ற பொழுது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இது குறித்து மக்கள் புகார் கொடுப்பார்கள் என எதிர்பார்க்காமல், உடனடியாக குற்ற செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.