தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு காமராஜர் பல்கலை.யில் பணி வழங்குவதா? - துணைவேந்தர் பகீர் பதில் - துணைவேந்தர் மு.கிருஷ்ணன் பதில்

மதுரை: அண்ணாமலை பல்கலை.யில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் வழங்க எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், துணைவேந்தர் மு.கிருஷ்ணன், உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் வழங்கப்படுகிறது என பகீர் பதிலளித்துள்ளார்.

kamarajar university
kamarajar university

By

Published : Oct 6, 2020, 7:13 AM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை பரிந்துரையின்பேரில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள பேராசிரியர், உதவிப்பேராசிரியர்களை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவது என்ற தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது இதற்கு காமராஜர் பல்கலை.யில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் ஒருவர் துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதத்தில், "அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களை மூன்றாண்டுகள் நியமிப்பது என்ற ஆட்சிக் குழு தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். அண்ணாமலை பல்கலை., பேராசிரியர்களை நியமிப்பதன் மூலம் காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே பணியாற்றி வருபவர்களின் பணி மூப்பு, பதவி உயர்வு ஆகியவை பாதிக்கப்படும்.

மூன்றாண்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் அடுத்தடுத்த அரசு ஆணைகள் மூலம் அவர்களது பணி நீட்டிக்கப்பட்டு, அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்படும் கட்டாயம் உருவாகும். ஏற்கெனவே காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் தற்போது வரை பதவி உயர்வின்றிப் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்களுக்கு காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆட்சிக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விதிகளை மீறுவதாகும். எனவே, இந்த தீர்மானத்தை அமல்படுத்தக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து துணைவேந்தர் மு.கிருஷ்ணன் கூறியதாவது, "காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் 7 பேரை நியமிக்க ஆட்சிக்குழு தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நியமனங்கள் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் நியமனத்தால் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் பணி மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது" என்றார்.

இதையும் படிங்க:“பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”- கனிமொழி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details