மதுரை: சிவகாசி ஆணையூர் கிராமம் அண்ணாமலையார் காலனி பகுதியைச் சேர்ந்த A.S. கருணாகரன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சிவகாசி அண்ணாமலையார் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களுக்கு உரிய நீர் ஆதாரம் எங்கள் தனிப்பட்ட நபர்களின் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வருகிறோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் சில நபர்கள் வந்து ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில், பல நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டு கிடந்த கிணற்றினை சரிசெய்து, அதில் வணிகநோக்கில் தண்ணீரினை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அவர்கள் உரிய அனுமதி பெற வில்லை.
எங்கள் வீடு மற்றும் சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் நீர் இல்லாமல் போய்விடும். எனவே அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் வணிக நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி G.R. சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் நீர்வள ஆதாரத்துறை செயலாளரை, இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது. மேலும் நீதிபதி, நிலத்தடி நீரை வணிக ரீதியாக எடுப்பது தொடர்பாக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
- நிலத்தடி நீரை வணிக ரீதியாக எடுப்பது குறித்து சட்டம் கொண்டு வருவது குறித்து அரசு ஏதேனும் முன்னெடுப்பு எடுத்துள்ளதா?
- வணிக ரீதியாக தண்ணீர் எடுக்க விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் / அனுமதி வழங்குவதற்கு உள்ளூர் மட்டத்தில் தகுதியான அதிகாரி யார்?
உரிமம் பெற்றவர்கள் தண்ணீரை எடுக்க அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் பட்சத்தில், என்ன தண்டனை வழங்கப்படும்?'' என்ற கேள்விகளை எழுப்பி, இது குறித்து நீர்வள ஆதாரத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலகர் தேசிய விருது.. ஒரே மேடையில் சரத் பவார், பிரதமர் மோடி!