மதுரை: கடந்த 2023ஆம் ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் போது மரணமடைந்த மாடு பிடி வீரர் அரவிந்த் ராஜின் புகைப்படம், நேற்று (ஜனவரி 16) பாலமேடு ஜல்லிக்கட்டு மைதானத்தின் அருகே வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டில், 9 காளைகளை அடக்கிய அரவிந்த்ராஜ், மாடு ஒன்று கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் மரணமடைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரது பெற்றோர் நினைவு தினம் அனுசரித்தனர்.
ஈடிவி பாரத்திற்கு அரவிந்தராஜின் தந்தை ராஜேந்திரன் அளித்த நேர்காணலில், "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது மகன் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். 2023ஆம் ஆண்டு முதல் பரிசு வாங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து விளையாடினார். தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தின் மீது அவருக்கு இயல்பிலேயே மிக ஆர்வம் இருந்தது.
என்னுடைய வேண்டுகோள் என்பது அவருக்கு ஒரு நடுகல் எழுப்பி, நினைவிடம் ஒன்று உருவாக்க வேண்டும் என்பது தான். இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி அலுவலர் மற்றும் கிராம கமிட்டிக்கும் மனு அளித்துள்ளேன். ஆனால், இதுவரைக்கும் எந்த ஒரு தகவலோ நடவடிக்கையோ இல்லை.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இப்படி ஒரு வீரன் விளையாடினான் என்பதை எதிர்கால தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். அந்த ஒரு பேரும், புகழும் அரவிந்தராஜுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். என் மகனுக்கு ஏற்பட்ட நிலை மற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் கடவுளிடம் எனது முறையீடு. நான் படுகின்ற துயரமும், வேதனையும் மற்ற பெற்றோர்கள் நிச்சயம் அடையக்கூடாது. ஆனாலும், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடைபெற வேண்டும். என் மகன் வீரனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பதில் எனக்குப் பெருமை" என ராஜேந்திரன் கண்ணீர் மல்க கூறினார்.
சங்க இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு: வீரத்திற்குப் பெயர்போன தமிழ் மரபின் வரலாற்று எச்சமாக இன்றும் விளையாடப்படுபவை ஜல்லிக்கட்டுப் போட்டிகள். இன்று ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் இந்த விளையாட்டு சங்கத் தமிழ் இலக்கியங்களில், ஏறு தழுவுதல் (Bull Taming) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்
என்கிறது தமிழ்ச் சங்க இலக்கியமான கலித்தொகை பாடல், இதன் பொருள் கொல்லும் வலிமை கொண்ட காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை, ஆய மகள் அடுத்த பிறவியில் கூட கணவனாக ஏற்கமாட்டாள் என்பதாகும்.
நடுகல் வரலாறு? அகழாய்வு கூறுவது என்ன? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நடுகல் அகழ் வைப்பகம் நூலில், நடுகற்கள் (வீரக் கற்கள்) வரலாறு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட தொல்லியல் அலுவலராக பணியாற்றிய முனைவர் சுப்பிரமணியன் எழுதிய இந்த நூலில், நடுகற்களின் வகைகள், அவை எந்த சூழலில் நடப்படுகின்றன போன்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தொறு கவருதல் (கால்நடைகளை அபகரித்தல்) தொறு மீட்டல் (அபகரித்துச் செல்லப்பட்ட கால்நடைகளை மீட்டல்), புலி குத்தப்பட்டான் நடுகல் (கால்நடைகளுக்காகப் புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்த வீரன்) பன்றி குத்தப்பட்டான் நடுகல் ( காட்டுப்பன்றியுடன் சண்டையிட்டு உயிரிழந்த வீரன்) , ஏறுதழுவுதலில் உயிரிழந்த வீரன் என பல காரணங்களுக்காக நடுகற்கள் ஊன்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
நடுகற்கள் வழிபாட்டின் தொடர்ச்சியாகத் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லாவி வேடியப்பன் கோயில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. கோயிலின் மூலஸ்தானம், பரிகார தெய்வங்கள் என அனைத்தும் நடுகற்களாகவே இந்த கோயிலில் உள்ளன.
நடுகல் எப்படி இருக்கும்? பொதுவாக நடுகற்களில் உயிரிழந்த வீரனின் உருவம், கைகளில் அவனுக்கே உரிய ஆயுதங்களைப் பிடித்தவாறு செதுக்கப்பட்டிருக்கும். இதனருகே அவரவர் குல வழக்கத்திற்கேற்ப, குங்கும சிமிழ் , கெண்டி, சிவலிங்கம் போன்றவை செதுக்கப்பட்டிருக்கும். இது தவிரவும் தமிழ் எழுத்துக்களில், வீரனின் பெயர், ஊர், எந்த காரணத்திற்காக மரணமடைந்தார் என்ற காரணங்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டின் பல்லவதேசம் என்று அழைக்கப்படும் தலைநகர் சென்னையைச் சுற்றிய பகுதிகள் துவங்கி, பாண்டிய தேசமான தென் தமிழ்நாடு வரையிலும் இந்த நடுகற்கள் பல ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்களுக்குத் தமிழக வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இன்று (17.01.2023) நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் காண வந்திருந்த தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், "ஐபிஎல் போட்டி போல ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முயற்சி செய்வோம்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க:சிறாவயல் மஞ்சுவிரட்டில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!