மதுரை: கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் கொண்ட இந்தியன் ரயில்வேயில் நுழைந்து பணியாற்றும் கனவும், வேட்கையும் கொண்ட இளைஞர்கள் பல்வேறு மாநிலங்களில் இன்றைக்கும் அதற்குரிய தேர்வுகளை எழுதி தங்களின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ்கின்றனர். ஆனால், அண்மையில் அங்கு நடைபெறும் பல்வேறு குளறுபடிகள் அவர்களது நம்பிக்கையைத் தகர்க்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ரயில் எரிப்புச் சம்பவம் இதன் அறிகுறிதான்.
தமிழ்நாட்டு மாணவர்களின் ரயில்வே கனவை நிறைவேற்றுவதில் பல்வேறு ஆலோசனைகள் தந்து, அதற்குரிய பயிற்சிகளையும் வழங்கி வருவதோடு, ரயில்வே தேர்வுகளுக்காகவே தான் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய 'ரயில்வே தேர்வுக்கான கைடு' நூலை இலவசமாக தமிழக அரசிடம் வழங்கிய இளைஞர் பாண்டுரங்கன் ரயில்வே தேர்வில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ரயில்வேயில் குரூப் 'டி' தேர்வுகள் நடைபெற்றன. அது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், குறிப்பிட்ட தேர்வில் தமிழர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகுதியற்ற வடமாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் இதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்விலும் இந்தியா முழுவதும் விண்ணப்பித்த பெரும்பாலான இளைஞர்களில் 70 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. குறிப்பிட்ட அளவுக்குள் புகைப்படங்கள் இல்லையென்றும் கையெழுத்து பொருந்தவில்லையென்றும் காரணம் கூறப்பட்டன.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுபோன்ற நிராகரிப்புகள் நிகழும். ஆனால், விண்ணப்பம் செய்த பிறகு எவ்வாறு நிராகரிக்கப்பட்டன என்று மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்காக நீதிமன்றம் சென்றபோது, மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் மீண்டும் தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்ற வழக்குகளால் தேர்வுகள் தள்ளிப்போவதும், தேர்வு எழுதிய மாணவர்கள் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகிறது.
வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள்:அதேபோன்று, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அந்தந்த மாநிலங்களில் இடம் பெறாமல், வேறு மாநிலங்களில் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆந்திரா, கேரளா கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் என தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. வடமாநில மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தேர்வுக்கு 10-15 நாட்களுக்கு முன்பு தான் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து அறியத்தரப்படுகின்றன. இந்நிலையில் அதற்குப் பிறகு முன்பதிவு செய்து, பயணம் மேற்கொண்டு மொழி தெரியாத பகுதியில் தேர்வு மையத்தைக் கண்டறிந்து செல்வது கூடுதல் சவாலாக உள்ளது. ஆகையால் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தேர்வுத்தாள் முன்னரே வெளியாதல்:கடந்த 2018-ஆம் ஆண்டு இளநிலை பொறியியல் தேர்வு நடைபெற்றது. ஆனால் அதற்கு முன்பாக அந்த தேர்வுக்கான வினாத்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி ஒளிப்பதிவுகள் மூலமாக சில முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தேர்வினை நடத்திய தனியார் தேர்வு முகமை மாற்றப்பட்டது. இந்தத் தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் வலியுறுத்தினர். ஆனால் ரயில்வே நிர்வாகம் இதனை செவிமடுக்கவில்லை. அதன் முடிவை அப்படியே அறிவித்தனர்.
மேலும் நார்மலைஸேசன் ஃபார்முலா என்ற பெயரில், யாருக்குமே புரியாத ஒரு அடிப்படையைப் பின்பற்றி தேர்வுத்தாள் திருத்தப்படுகிறது. இந்த முறையின் மூலம் வெறும் 100 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற தேர்வில் தமிழர்கள் மிகக் குறைவான மதிப்பெண்ணும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 120க்கும் மேலும் மதிப்பெண் வாரி வழங்கப்பட்டது. இந்த முறை குறித்த வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியம். ஆனால் இதுவரை இந்த முறையிலான தேர்வு குறித்து ரயில்வே நிர்வாகம் அறிவிக்கவே இல்லை.
பணி நியமனங்கள்:எந்தெந்த ரயில்வே கோட்டத்திலிருந்து விண்ணப்பம் செய்கிறார்களோ, அவர்களது தேர்ச்சிக்குப் பிறகு அந்தக் கோட்டத்திலேயே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என ரயில்வே விதிமுறை உள்ளது. எடுத்துக்காட்டாக, ஆர்ஆர்பி(RRB) தேர்வுக்கு சென்னையின் தெற்கு ரயில்வேயில் விண்ணப்பம் செய்திருந்தால், தெற்கு ரயில்வேயில் தான் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏஎல்பி (Assistant loco pilet) தேர்வில் கோரக்பூரில் விண்ணப்பம் செய்த நபர்கள் 55 பேருக்கு தமிழ்நாட்டில் பணி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றினார்கள். இதுபோன்ற ஒரு சில தவறுகள் காரணமாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன.
சொல்லுக்கும் செயலுக்கும் முரண்: ரயில்வேயின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது ஒன்று, ஆனால் தேர்வு நடைபெறும்போது அமல்படுத்தப்படுவது வேறாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கடந்த 2019-ஆம் ஆண்டு குரூப் டி(Railway Group D) தேர்வின்போது முதலில் எழுத்துத் தேர்வு பிறகு உடற்தகுதித் தேர்வு என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், தேர்வு நடைபெறும்போதே 2 எழுத்துத்தேர்வு என மாற்றினார்கள். இது மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
என்டிபிசி சிபிடி-1 தேர்வுகளில் 1:20 விகிதாச்சாரத்தில் ஆட்கள் எடுக்கப்படும் என அறிவித்துவிட்டு சிபிடி-2 தேர்ச்சி பெற்றவுடன் 1:10 என விகிதாச்சாரத்தை மாற்றினார்கள். இந்த குளறுபடி அப்போது பல்வேறு வகையிலும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையும் ரயில்வே நிர்வாகம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அது கடைசியில் வன்முறையாகி, ரயிலுக்கே தீ வைக்கும் நிலை உருவானது. இதுபோன்ற வன்முறையை ரயில்வே நிர்வாக தடுத்திருக்க வேண்டும். எந்த அறிவிப்பு வெளியிட்டாலும் அதனை தெளிவாக அமல்படுத்த வேண்டும்.