மதுரை: கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாகக் காசிக்கு வாராந்திர சிறப்பு ரயில் சேவை நாளை (டிச.17) முதல் துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கன்னியாகுமரி - பனாரஸ் - கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை நாளை (டிச.17) கன்னியாகுமரியிலிருந்து துவங்க இருக்கிறது. இந்த ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாளை மாலை 5.30 மணிக்குத் துவக்கி வைக்கிறார்.
திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும் இந்த ரயிலுக்கு நாளை இரவு 8 மணிக்குத் திருநெல்வேலியில் வைத்து வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதில் மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் நலச் சங்கத்தினர், ரயில் பயணிகள், பொதுமக்கள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.