மதுரை: தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் தமிழ்நாடு அரசு ஆணை 72-இன்படி மூடப்பட்டது.
இந்த நிலையில் கரோனா இரண்டாம் அலையின் போது திரவ நிலை ஆக்ஸிஜன், மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர். தற்போது மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஆலை மூடப்பட்டது.
தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட கழிவுகளை வெளியேற்றவும், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்யவும் உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சுவாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் அறிக்கையை தாக்கல் செய்தார்.