திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் பெரியகுளம் அனைத்து பாசன விவசாய சங்கத்தின் தலைவர் முருகன் பொதுநல மனு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார்
அந்த மனுவில், "விஜயநாராயணத்தில் அமைந்துள்ள பொதுப்பணித் துறைக்குள்பட்ட குளம் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவுடையதாகும். இந்தக் குளம் தென்தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய குளம் ஆகும். இந்தக் குளத்து நீரை நம்பி 35,000 ஏக்கர் நிலம் உள்ளது. இந்தக் குளத்தில் தண்ணீர் நிறைந்து இருந்தால் நிலத்தடி நீர் உயர்ந்து மறைமுகமாக சுமார் 12500 ஏக்கர் நிலம் பயன்பெறும், இக்குளத்தை நம்பி அனைத்து சாதிகளையும் சார்ந்த 20 கிராம மக்கள் சுமார் 15000 பேர் உள்ளனர்.
மேலும் இதனை நம்பி சுமார் 25,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்தப் பகுதியில் உள்ளன. மேலும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்தக் குளம் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்துவந்தது.
உயர் அலுவலர்களுக்கு மனு அளித்த பின்பு விஜயநாராயணம் குளம் குடிமராமத்துப் பணிக்காக ரூபாய் 15 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. 2019-2020 குடிமராமத்து திட்டத்தின்படி ரூ.2 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
அந்தப் பணத்தை கொண்டு மொத்த குளத்தையும் குடிமராமத்து செய்யாமல், மொத்த குளத்தில் ஒரு பகுதியான சுமார் 600 மீட்டர் கரை மட்டுமே குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டன. அந்தப் பணியையும் ஒப்பந்தக்காரர் சரியாகச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்ட அலுவலர்கள் வரும் ஆண்டில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார்கள்.
இந்நிலையில நாங்குநேரி இடைத்தேர்தலின்போது இவ்வாண்டு நிதி ஒதுக்கி, குளம் குடிமராமத்து செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து செய்ய 16 கோடி 76 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விஜயநாராயணம் குளத்திற்கு வரும் ஆண்டில் ரூபாய் 4 கோடி ஒதுக்கீடு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய நாராயணம் குளத்தின் குடிமராமத்துப் பணிகளின் நிலை அறிக்கையை நெல்லை மாவட்ட ஆட்சியர் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.