மதுரை: நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'லியோ' (Leo) திரைப்படம், இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்திருந்த நேரத்தில் திடீரென ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இச்சூழலில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ரத்தானதால் விஜயின் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன இந்நிலையில் அதற்கு வேறு சில அரசியல் அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆடியோ ரத்து அறிவிப்பில் அரசியல் அழுத்தம் எதும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் X வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தது. ஆனாலும், விஜய் ரசிகர்கள் ஆளும் கட்சியை சீண்டும் வகையில் ட்விட்டரில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் வித்தியாசமான வகையில் சுவரொட்டி ஒன்றை ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். விஜயின் அரசியல் நுழைவு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மதுரை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், தனியார் செய்தித்தாள் வடிவில் இந்த சுவரொட்டியை வடிவமைத்துள்ளனர்.