மதுரை: தமிழ்நாடு முதலமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், "மதுரை மாநகராட்சியில் குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் ஆண்டுக் கணக்கில் சீரமைக்கப்படாமல் மக்களை துயரில் ஆழ்த்தி வருகிறது. குறிப்பாக அதிக போக்குவரத்து இருக்கும் நகரின் மையப்பகுதி 2011இல் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
நகரின் வடக்குப்பகுதியில் உள்ள சுமார் 15 வார்டுகள் முழுவதும் களிமண் பூமியாக இருப்பதாலும் பல ஆண்டுகளாக மண் சாலைகள் கூட அமைக்கப்படாததாலும் தற்போதைய பாதாள சாக்கடை பணிகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கு இதற்கு அடுத்து நடைபெறவுள்ள குடிநீர் திட்டப் பணிகள் முடிந்த பிறகு தான் புதிய சாலை அமைக்க இயலும் எனத் தெரிகிறது. எனவே மேற்கண்ட இடங்கள் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
மதுரை மாநகர சாலை சீரமைப்புக்கு சிறப்பு நிதி
நகரின் மையப்பகுதி மற்றும் பிற பிரதான சாலைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை தர நிலை அடிப்படையில் சிறந்த தரத்துடன் நடையாளர்களுக்கான குறியீடுகள், பிரதிபலிப்பான்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான சாலை பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் உடனடியாக சீரமைக்கவும், நகரின் வடபகுதியில் இதுவரை சாலைகளே அமைக்கப்படாத இடங்களில் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்டு மக்களின் இன்னலை போக்கவும் சுமார் ரூ.60 கோடி அவசர சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.