மதுரை: தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று (மே.24) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் காய்கறி தொகுப்பு விற்பனை தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, பழங்கள் ஆகியவை தங்குதடையின்றி கிடைக்கும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் 100 ரூபாய்க்கு தக்காளி, வெங்காயம், அவரைக்காய், உருளைகிழங்கு, கத்தரிக்காய், தேங்காய், கருவேப்பிலை, வெண்டைக்காய் அடங்கிய காய்கறி தொகுப்புகளை, மாநகராட்சி வாகனங்கள் வீடுதோறும் சென்று விற்பனை செய்யும் பணிகள் இன்று தொடங்கியது.
இந்த விற்பனையை மாநகராட்சி ஆணையர் விசாகன் தொடங்கி வைத்தார். இந்த காய்கறி வாகனங்கள் வீடுகள் தோறும் தேடி வரும் என்பதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள 100 வார்டுகளிலும் விநியோகம் செய்ய 1,500 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காய்கறிகளைத் தரமானதாக வழங்குவதற்காக நேரடியாக விவசாயிகள், வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து வாகனங்களிலும் ஒலிப்பெருக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநகராட்சி விற்பனை செய்வதை நேற்றே அறிவித்திருந்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தியிருக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். காய்கறிகள் போல விரைவில் மளிகை பொருட்கள், பழங்களை வீடுதோறும் விற்பனை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!