மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில், மதிமுக சார்பில் நிதி அளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்கிறேன். வரும் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலினுக்கு லட்சக்கணக்கானோர் ஆதரவு தருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்பது ஆண்டு காலம் தூங்கிவிட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய எந்த திட்டமும் இன்னும் வரவில்லை, வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமை அரசாகவும் உள்ளது. தேர்தலில் 234 இடங்களில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இந்தத் தேர்தலில் அதிமுகவையும் பாஜகவையும் தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதால் எத்தனை இடம் கொடுத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். புதிதாக எந்த கட்சிகளும் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை.
எனது மகன் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார். கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை. முதியவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவது சரிதான் என்பது எனது கருத்து. ஸ்டாலின் குறிப்புகளை துண்டுச் சீட்டில் எடுத்துக் கூறி வருகிறார், முதலமைச்சர் போல கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்பதுபோல பேசவில்லை. ஏழுவர் விடுதலையில் மத்திய மாநில அரசுகள் சேர்ந்து கபட நாடகம் நடத்துகிறது. இந்த அரசு பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டை நாசமாக்கியதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம்" என்றார்.
இதையும் படிங்க:திமுகவுடன் கூட்டணி; சீட்டு ரொம்ப குறைவு தான் - தொண்டர்களுக்கு ஆறுதல் கூறிய வைகோ!