மதுரை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 'முதல்படை வீடு' எனும் பெருமை பெற்றது, திருப்பரங்குன்றம். இந்த கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் 'வைகாசி விசாகத் திருவிழா' மிகவும் புகழ்பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா கட்டுப்பாடுகளால் உள்திருவிழாவாக நடைபெற்ற விசாகத் திருவிழா, இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியளித்துள்ளது.
வைகாசி விசாகத்திருவிழா கடந்த 3ஆம் தேதி, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்குப் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விசாகத்திருவிழாவினை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். சண்முகர் சந்நிதியில் காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து கட்டளைதாரர் பாலாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் 'விசாக கொறடு' மண்டபத்தில் காலை 6 மணிக்கு எழுந்தருளினர். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காகக் கொண்டு வந்த பால்குடங்கள் மூலம் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.