தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை ஆறு கால்வாயாக மாறும் - அதிர்ச்சித் தகவல் - Vaigai River Road Work

மதுரை: வைகை ஆறு ஒரு கட்டத்திற்குப் பிறகு கால்வாயாக மாறும் அவலநிலை ஏற்படும் என சமூக ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்டிஐ
ஆர்டிஐ

By

Published : Mar 10, 2020, 10:59 AM IST

மதுரையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சாலை அமைப்பதற்காக வைகை ஆற்றின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகிறன்றன. குரு தியேட்டர் பாலத்திலிருந்து விரகனூர் வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சாலை விரிவாக்கப் பணி குறித்து ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளது என்று சமூக ஆர்வலர் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக ஆர்வலர் ராஜன் பேட்டி

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:

வைகையின் வட, தென் கரைகளில் 30 அடி அகலத்திற்கு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வைகையாற்றில் ஆக்கிரமிப்பு துவங்கியுள்ள நிலையில், மேலும் இரண்டு புறமும் 30 அடிக்கு சாலை போடுகிறேன் என்று மதுரை மாநகராட்சியின் பொதுப்பணித் துறையும் சுருக்கி உள்ளது. இது குறித்து பல்வேறு மட்டத்திலும் நாங்கள் புகார் அளித்துள்ளோம்.

இரு புறமும் ஏறக்குறைய 15 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வைகை ஆற்றுக்குள் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது வரை கட்டப்பட்ட தடுப்புச் சுவரையும் துளையிட்டு கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து மதுரை மாநகராட்சியில் தீர்மானம் இயற்றி உள்ளார்களா அல்லது மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார்களா என்றால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.

வைகை ஆற்றின் தற்போதைய நிலை

பழமையான ஆறான வைகையாற்றை இதுபோன்று சுருக்குவது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அடுத்தடுத்து வருகின்ற ஆட்சியாளர்களும் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில், மேலும் இதுபோன்று செயல்பட தொடங்கினர். ஒரு கட்டத்திற்கு பிறகு வைகை ஆறு கால்வாய் போன்று ஓடுகின்ற நிலை ஏற்படும். இதற்கு முன்பாக, கிருதுமால் ஆற்றை நாம் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் இழந்துள்ளோம்.

வைகை ஆற்றுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதே எங்களது விருப்பம். இது குறித்து பல்வேறு காலகட்டங்களில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் எழுப்பினோம். ஆனால் அவற்றுக்கெல்லாம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதைப்போன்று வைகை ஆற்றின் கரையோரம் இருந்த பழமையான படித்துறைகள், தற்போது முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன.

ஆர்டிஐ தகவலில், படித்துறைகளை அமைப்போம் என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மை வேறாக உள்ளது. அதுபோன்று அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், சித்திரை திருவிழா நிகழ்வுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இதுவரையில் அப்பகுதி பள்ளமாகவும், கட்டுமானம் நிறைவடையாத நிலையிலும் உள்ளது.

பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அந்நிகழ்வில் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு முறையான விளக்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கிடைக்காத காரணத்தால், வைகையை காப்பாற்றும் இறுதி முயற்சியாக பசுமை தீர்ப்பாயத்தை நாடவிருக்கிறோம் என்றார்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details