மதுரை:தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையத்தின் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69.42 அடி உயரத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு 3ஆவது முறையாக வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இந்த நிலையில் அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளதால் வைகை அணைக்கு வரக்கூடிய அனைத்து நீர் வரத்தும் உபரி நீராக மொத்தமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மதுரை நகர்ப் பகுதியில் 13 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கக் கூடிய வைகை ஆற்றில் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் வைகை ஆற்றில் குளிக்கவோ, செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யானைக்கால் தரைப்பாலத்தைத் தொட்டுச் செல்லும் அளவிற்குத் நீர் தற்போது ஆர்ப்பரித்துச் சென்று கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தரைப்பாலம் மூழ்கும் நிலையை எட்டவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Chennai Rain Alert: வெள்ள அச்சத்தால் கார்களை மேம்பாலத்தில் நிறுத்திய மக்கள்