மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் ஜே.சுரேஷ். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணியாற்றினார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸில் திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது கொடை ரோட்டுக்கும் அம்பாத்துறைக்கும் இடையே தண்டவாளத்தில் பாறைகளும், மணலும் சரிந்து விழுந்து கிடந்ததைக் கண்டவுடன், சுதாரித்து ரயிலை நிறுத்தினார்.
சுரேஷின் சமயோஜிதத்தால் அச்சமயம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்ட 1500 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதுடன், மிகப்பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான இந்த செயலின் காரணமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரிந்துரையின் பேரில், வீர தீர செயலுக்கான தமிழ்நாடு அரசின் அண்ணா விருது லோகோ பைலட் ஜே.சுரேஷுக்கு வழங்கப்படவுள்ளது.
வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விருதை வழங்குகிறார்.