கரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் இணையதளத்தில் பல்வேறு விதமான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் ஆகிய விளையாட்டுகள் அதிக அளவில் இணைய தளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டுகளால் பல்வேறு இளைஞர்கள் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக அளவு இளைஞர்கள் இதில் மூழ்கி தங்கள் பணங்களை இழந்து வருகின்றனர்.
இந்த விளையாட்டுகளின் மூலமாக பணத்தை இழந்த இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டமாக திகழும் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் .
மேலும் இந்த சூதாட்ட விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர் விராத் கோலி, நடிகை தமன்னா மற்றும் பல நடிகர்கள் , விளையாட்டு வீரர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்து இந்த விளையாட்டை ஊக்குவித்து வருகின்றனர்.
இந்த விளையாட்டுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி இதில் நடித்துன்ன விளம்பர தூதுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஃஸ்வி மற்றும் இதே போன்ற மற்றொரு வழக்கை முத்துக்குமார் என இருவர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று (நவ. 2) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் நீலமேகம் முறையீடு செய்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை (நவ. 3) எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.