மதுரை:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, இடையப்பட்டி அருகே உள்ள சித்திர சீலமநாயக்கனூரைச் சேர்ந்த மனுதாரர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வெளியூரில் தங்கி வேலை செய்து, அவர்கள் சாதியைச் சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் தங்களது சொந்த ஊருக்குச் சென்று, பரமசிவம் என்பவரின் மகன் திருமணம் கோயிலில் நடத்த திட்டமிட்டபோது, ஊரில் உள்ளவர்கள் தங்களை ஊருக்குள் விடாமலும், கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பெயரில், அவர்களது திருமணம் கோயிலில் நடைபெற்றது. இந்நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி தனது வீடு மற்றும் தனது உறவினர்கள் வீட்டிற்குச் செல்லும் பாதையை நான்கு புறமும் வேலி அமைத்து தடுத்து, தங்களது பட்டா இடத்தில் ஷெட் அமைத்துள்ளனர். மேலும், கிராமத்தில் வரும் தண்ணீரைப் பிடிக்க விடாமல், உறவினர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாதபடி தீண்டாமை வேலி அமைத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சொந்த ஊருக்குள் செல்வதற்கு தீண்டாமை வேலியை அகற்றி, தங்களது சொந்த சொத்துக்களை மீட்டு, கோயிலுக்குள் செல்லவும், குடிநீர் மற்றும் இதர காரியங்களில் கலந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை விசாரணை தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி, வேலி அமைத்துள்ள இடம் பட்டா நிலமா, அரசு புறம்போக்கு நிலமா எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும் தீண்டாமை வேலி இருக்கிறதா என்பது குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரணையைத் தொடங்க வேண்டும். தீண்டாமை வேலியாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இது கவனம் கொள்ள வேண்டிய குற்றச்சாட்டு. இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், பாலவிடுதி காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஃபைபர்நெட் ஊழல்; சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கைக்கான தடை நீடிப்பு!