தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொகுதி நிதியில் தடுப்பூசி: மத்திய அமைச்சரின் பதிலால் வேதனை அடைந்த எம்.பி! - union minister harsh vardhan

மதுரை: மக்கள் பணியில் ஈடுபட 30 ஆயிரம் இளைஞர்களுக்கு தனது தொகுதி நிதியில் இருந்து, தடுப்பூசி போட மத்திய சுகாதார அமைச்சரிடம் வைத்த வேண்டுகோளைப் பல்வேறு காரணங்கள் கூறி நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வேதனைத் தெரிவித்துள்ளார்.

su venkatesan mp vaccine request
su venkatesan mp vaccine request

By

Published : May 29, 2021, 2:37 PM IST

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மரு. ஹர்ஷவர்த்துக்கு கடந்த 13ஆம் தேதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு சுகாதாரத் செயலாளர் பதில் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’எனது கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 30 ஆயிரம் இளைஞர்களை கரோனா தொற்று எதிர்ப்பு பணி களத்தில் தன்னார்வ தொண்டர்களாக ஈடுபடுத்த திட்டமிட்டிருக்கிறேன். அவர்கள் களத்திற்கு செல்ல ஏதுவாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடியை ஒதுக்குவதாகவும், அதற்கான தடுப்பூசிகளை அளித்து உதவுமாறும் கோரியிருந்தேன்.

சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சுகாதாரத்துறை பதில்

இதற்கு மத்திய சுகாதார செயலாளர் அனுப்பியுள்ள கடிதம், மதுரை மக்களவைத் தொகுதியில் கரோனா தொற்று எதிர்ப்பு களத்தில் நாங்கள் ஆற்றுகிற பணியையும், அளிக்கிற ஒத்துழைப்பையும் பாராட்டியே தொடங்கியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனின் கடிதம்

இந்த கள அனுபவத்தில் இருந்தே அனுபவம் மிக்க பலரையும் கலந்தாலோசித்து "சமூக பங்கேற்பை" ( Community Participation) உறுதி செய்கிற வகையில் தான் ஓர் நேர்த்தியான திட்டமிடலை முன் வைத்தேன். குடியிருப்பு பகுதியில் முதியோர் பராமரிப்பு, கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு உதவி, அவசர மருத்துவத் தேவைகளுக்கு வாகனம், தனிமைப் படுத்தப்பட்டவர்க்கு உணவு ஏற்பாடு போன்றவற்றிற்கு இந்த தன்னார்வ இளைஞர்கள் பெரும் பங்களிப்பை தர இயலும்.

தொகுதி நிதியில் தடுப்பூசி வேண்டுகோள் நிராகரிப்பு

இளைஞர்களின் ஆற்றல் நேர்மறையாக பயன்படும். இவ்வளவு கனவுகளோடு முன் வைக்கப்பட்ட திட்டத்திற்கு சுகாதாரத் துறைச் செயலாளர் தந்துள்ள பதில் பெரும் அதிர்ச்சியை தருகிறது. அந்தப் பதிலில், ’விலை தாராளமயம் மற்றும் கோவிட்-19 தேசிய தடுப்பூசி பரவல் திட்டத்தைக் குறிப்பிட்டு நேரடியாக தடுப்பூசியைத் தர இயலாது. மாநிலங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு தருவதற்கே அக்கொள்கையில் வழிவகை உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு வகுத்துள்ள தடுப்பூசி கொள்கையை அதன் விலை நிர்ணய முறை அடிப்படையிலேயே நாங்கள் ஏற்கவில்லை. மூன்று விலை, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை, தனியார்களின் நேரடி கொள்முதல் ஆகியனவெல்லாம் ஒரு பேரிடர் காலத்தில் மக்கள் நலன் நாடும் அரசாங்கம் செய்யத் தக்க செயல்கள் அல்ல. மக்களின் உயிர் வாதை உலுக்குகிற வேளையில் கூட உலகமய பாதையை விட்டு விலக மாட்டேன் என்கிற அரசின் நிலைப்பாடு ஆழ்ந்த வேதனை தருகிறது.

வேதனை தரும் அரசின் நிலைப்பாடு

நிரந்தர நீண்ட காலத் தீர்வுகளுக்கு அரசின் கதவுகளும், காதுகளும் திறக்காது. உடனடி களத்தேவைகளுக்கும் திறக்காது என்றால் என்ன செய்வது? மதுரை கரோனா தொற்று எதிர்ப்பு களத்திற்கு நான் முன் மொழிந்துள்ள திட்டம் தடுப்பூசி கொள்கையையும் கடந்தது. நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் முன் மாதிரியாய் அமலாக்கி பிற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யலாம் என்ற திறந்த மனதோடு அணுகப்பட வேண்டிய ஆலோசனை.

மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்வீட்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியும் மத்திய அரசு நிதியின் ஒரு பகுதிதான் என்ற எளிய உண்மையைக் கூட மேற்கண்ட கடிதம் கணக்கில் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தனியார் கூட நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்யமாட்டோம் என்பதை போன்ற மக்கள் விரோத செயல் வேறெதுவுமில்லை.

உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். கொள்கையில் மாற்றம் கொண்டு வாருங்கள். நல்ல முடிவை நானும் எனது தொகுதி மக்களும் எதிர் பார்க்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details