தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ் பயில்வோர் கட்டாய பணி ஒப்பந்தம் - ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற அரசுக்கு உத்தரவு

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டின் கீழ் பயில்வோருக்கான கட்டாய பணி ஒப்பந்தங்களில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

By

Published : Jul 12, 2022, 7:14 PM IST

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை:கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நிலையில், ஒப்பந்த அடிப்படையில் 10 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என தனக்கு அனுப்பப்பட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் கேரளாவைச் சேர்ந்தவர். நெல்லை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையில் பயில அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துள்ளது. 2020 செப்டம்பர் மாதம் படிப்பு முடிந்த நிலையில், படிப்பில் சேரும் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின், அடிப்படையில் 10 ஆண்டுகள் தமிழக அரசுக்கு கீழ் பணியாற்ற வேண்டும். அல்லது இரண்டு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரர் பணியில் சேர தவறியதால் நெல்லை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கடந்த 2001 செப்டம்பர் 20ஆம் தேதி மனுதாரரை 2 கோடி செலுத்துமாறு கூறியுள்ளார்.

அதுதொடர்பாக மனுதாரர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லாத நிலையில் இழப்பீடு தொகையை செலுத்துமாறு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்யுமாறு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், பணியிடம் தொடர்பான கலந்தாய்வில் மனுதாரர் கலந்துகொள்ளவில்லை. தமிழக அரசு ஒப்பந்தத்தை 10 ஆண்டுகளிலிருந்து இரண்டு ஆண்டுகளாகவும், தொகையை 50 லட்சமாகவும் குறைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.

இதுதொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கான கட்டாய பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஒரேமாதிரியாக நிர்ணயம் செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் கட்டாய பணி தொடர்பான ஒப்பந்தங்களில் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் மனுதாரர் ஆஜராகவில்லை. மனுதாரருக்கு நாகப்பட்டினத்தில் துணை அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணி வழங்கப்பட்டு நல்ல ஊதியம் வழங்கப்பட்டும் மனுதாரர் பணியாற்ற தயாராக இல்லை. மனுதாரர் தரப்பில், மனுதாரர் தமிழ் மொழியில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாய படுத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மனுதாரர் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் பணியாற்ற விரும்பவில்லை, ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற உள்ளார். ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது அரசு நிர்ணயித்துள்ள 50 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:அரசு போக்குவரத்து துறை ஒருபோதும் தனியார் மயமாகாது - அமைச்சர் சிவசங்கர் உறுதி

ABOUT THE AUTHOR

...view details