தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கீகாரம் பெறாத படிப்புகள் - தனியார் பார்மசி கல்லூரி தாளாளருக்கு சிறைத் தண்டனை! - கல்லூரி தாளாளர் முகைதீன் பாஷா

மதுரை : அங்கீகாரம் பெறாத படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து, இழப்பீடு வழங்கத் தவறிய தனியார் பார்மசி கல்லூரியின் தாளாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Unauthorized Courses Private Pharmacy College Defendant Imprisoned
அங்கீகாரம் பெறாத படிப்புகள் - தனியார் பார்மசி கல்லூரி தாளாளருக்கு சிறைத் தண்டனை!

By

Published : Mar 10, 2020, 7:51 PM IST

கடையநல்லூரில் இயங்கி வரும் தனியார் பார்மசி கல்லூரியில் 2014ஆம் கல்வி ஆண்டில் பி.பார்ம் சேர்ந்த மாணவர்கள் சிலர், நான்கு ஆண்டு படிப்பு முடிந்தும் தங்களைப் பல்கலைக்கழகம் தேர்வு எழுத அனுமதிக்காததால் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ’பல்கலைக்கழகத் தேர்வு எழுத அனுமதிக்காதது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதற்கு அங்கீகாரத்துக்காக வழக்கு தொடர்ந்திருக்கிறது. விரைவில் தீர்ப்பு நமக்கு ஆதரவாக வரும். அதன் பின்னர் அங்கீகாரம் எளிதாக கிடைத்துவிடும். தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்றனர். 2, 3, 4 ஆண்டு பல்கலைக்கழகத் தேர்வு எழுதாமலேயே எங்களின் நான்காண்டு படிப்பும் முடிந்தது. இப்போதுவரை எங்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை’ என ஆதங்கத்துடன் கூறியிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் (10.4.2019) இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அங்கீகாரம் பெறாத படிப்புகளில் சேர்க்கப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்கள் ஸ்ரீகுட்டி, வீனாபாஸ்கரன், நீலிமா ஆகியோருக்கு தலா 3 லட்சம், பிரவீன், காளிராஜ், ராஜ்முகமது ஆகியோருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

”இந்த உத்தரவை நிறைவேற்றாததால் கல்லூரி தாளாளர் முகைதீன் பாஷா என்ற ரவி, முதல்வர் காதர் முகைதீன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மாணவர் பி.ஜே.ஸ்ரீகுட்டி மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,"மாணவர்கள் அங்கீகாரம் பெறாத படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். உடனடியாக மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறிவிட்டனர். நான்கு ஆண்டுகள் வீணாகி விட்டன. மற்றொரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்து புதிதாக படிப்பைத் தொடங்க நிதி தேவைப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவும் மீறப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத படிப்புகள் - தனியார் பார்மசி கல்லூரி தாளாளருக்கு சிறைத் தண்டனை!

இதனால் நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படி கல்லூரியை நடத்தும் அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், கல்லூரி தாளாளராகவும் இருக்கும் முகைதீன்பாஷாவுக்கு 6 மாத சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் காதர் முகைதீனைப் பொறுத்தவரை, மனுதாரருக்கு 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்க தவறினால், அவருக்கும் 6 மாத சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படும். இந்த உத்தரவை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ‘வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்’

ABOUT THE AUTHOR

...view details