மதுரை:மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்குs செல்லும் மாணவ மாணவிகள் ஒரு வாரமாக வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் சூழலும் நிலவி வந்தது.
இந்த புயல் பாதிப்புகளின் சுவடுகள் இன்னும் சில இடங்களில் இருந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் (JRF), தேசிய தகுதித் தேர்வு (NET) ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
இதையும் படிங்க: “ஆருத்ரா முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” - இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் ஆர்.கே.சுரேஷ்!
இந்நிலையில், சென்னை மற்றும் ஆந்திராவில் இந்த யுஜிசி நெட் தேர்வு எந்தவித மாற்றத்திற்கும் உட்படாமல், டிச.6-ஆம் தெதி நடத்தப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் ஆந்திரா, பாதிப்பில் இருந்து மீளாமல் இருந்த நிலையில், பல மாணவர்கள் தேர்வு மையங்களை அடைய முடியாமல் தேர்வில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தேர்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை மறு வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, புயல் காரணமாக சென்னை மற்றும் நெல்லூரில் டிச. 6 அன்று திட்டமிடப்பட்ட அனைத்து பாடங்களுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மட்டும், நாளை (டிச.14) தேர்வு நடத்தப்பட உள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.
மேலும், இது குறித்த சமீபத்திய விபரங்களுக்கு www.nta.ac.in மற்றும் https://ugcnet.nta.ac.in எனும் இணையதளங்களை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, யுஜிசி நெட் தேர்வை எழுத இயலாதவர்களுக்கு மறு தேர்வு வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சரிடம், எம் பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருவூரில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் திறக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் மக்கள்!