மதுரை:மதுரை நகர திமுக சட்டப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் தேவசேனம் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகாா் மனுவை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில், 2022 ஆம் ஆண்டு முதல் @devasenan1981 என்ற பெயரில் ட்விட்டரில் கணக்கை உபயோகித்து வருகிறேன். கடந்த 03.09.2023 அன்று ட்விட்டரில் @Amit Malviya என்ற ட்விட்டர் கணக்கைக் கொண்ட அமித் மாளவியா ட்வீட் செய்ததை பார்த்தேன்.
அந்த ட்வீட்டரில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளியை பதிவேற்றி பா.ஜ.க-வின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளராக இருக்கும் அமித் மாளவியா சனாதனத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார், என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 02.09.2023 அன்று தேனாம்பேட்டையிலுள்ள அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கின் பேசிய போது சனாதன தர்மம் என்பது கோவிட்-19, டெங்கு, மலேரியா போன்ற நோய்களைப் போன்று ஒழிக்கப்பட வேண்டிய ஒரு சமூகக் கேடு என்று கூறினார். இதனையடுத்து பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரான அமித் மால்வியா இந்த பதிவினை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
இதையும் படிங்க:"உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கைப் பேச்சு... ராமநாதபுரத்தில் திமுகவுக்கு ஆதரவு இல்லை" - சீமான் அடுத்தடுத்து அதிரடி!
அதன் பின்பு அமைச்சர் உதயநிதி விரிவான ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில், சனாதன தர்மம் என்று அழைக்கும் மக்களை இனப்படுகொலைக்கு தாம் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை என்றும், சனாதன தர்மம் என்பது மக்களைப் பிளவுபடுத்தும் கொள்கை என்றும் சாதி மற்றும் மதத்தின் பெயர், சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்கி எறிவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.
மேலும் தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்தின் அடிப்படையில் ஆழ்ந்த ஆய்வுக்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்த பின்பு அமித் மாளவியா ட்விட்டரில் பதிவு செய்த கருத்தை திரும்ப பெறவில்லை மேலும் மன்னிப்பும் கேட்கவில்லை. அமித் மாளவியாவின் கருத்து சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது.
மேலும், அமித் மாளவியா ட்வீட்டைப் பார்த்த பிறகு நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், இரவு தூக்கமில்லாமல் இருந்துவருகிறேன். எனவே, பொதுமக்களிடையே அச்சம், வகுப்புவாத வெறுப்பை தூண்டி, அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த அமித் மாளவியா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவை மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க:சனாதன சர்ச்சை கருத்து விவகாரம்... அமைச்சர் உதயநிதி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு..