மதுரை:ஒத்தக்கடை அருகே உள்ள கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு, யா.கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆயி என்ற பூரணம் அம்மாள், தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.
ஆயி அம்மாளின் இந்த செயலுக்கு பலரும் பாரட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதுரையில் உள்ள ஆயி அம்மாளின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அழியா கல்விச் செல்வத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திட துணை நிற்கும் வகையில், பெரும் மதிப்புள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொடையாக வழங்கியுள்ள ஆயி என்கிற பூரணம் அம்மாளை இன்று அவருடைய வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
மறைந்த தனது மகள் ஜனனியின் நினைவாக இந்த மகத்தான சேவையை செய்திருக்கும் அவருக்கு, குடியரசு தினத்தன்று நம் முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் சிறப்பு விருதினை அறிவித்துள்ள நிலையில், நாம் நினைவுப்பரிசை வழங்கி அவரை கவுரவித்தோம். அவரின் மகளுடைய திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தோம். ஆயி அவர்களின் கல்விக்கான அரும்பணி காலத்திற்கும் நிலைத்திருக்கும்” என பதிவிட்டுள்ளார்.