மதுரை: ஒரு காலத்தில் நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாலை நேர பரபரப்பென்றால் அது தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள்தான். கையில் தாளை சுருட்டிக் கொண்டு அப்பள்ளிகளுக்குச் சென்று திரும்புவது இயல்பான காட்சியாக இருக்கும். இயக்குநர் பாலாஜி தயாரித்த 'விதி' என்ற திரைப்படத்தில் தட்டச்சுப் பள்ளிகளின் மீதான அன்றைய இளம் தலைமுறையினர் பார்வையைக் கொண்டே அதில் காட்சிகள் பலவற்றை அமைத்திருப்பார். அப்படத்தில் ஆச்சி மனோரமாவின் 'எல்ஓவிஇ... எழுத்த தட்டித்தட்டியே தேச்சுபுட்டான் போங்க' என்ற வசனம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும்.
இடையில் கணினி யுகம் பிறந்த பின்னர், தட்டச்சுப் பள்ளிகள் சற்று சுணக்க நிலையை எட்டியிருந்தன. இதனால், இத்துடன் அவை முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சம்கூட நிலவியது. ஆனாலும், கணினியில் தட்டச்சு செய்தாலும், அவற்றுக்கு தட்டச்சுப் பொறிகள் மூலமாக உள்ளன என்பதும் மறுக்க முடியாதது. ஆனாலும் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தன. தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் தட்டச்சு கல்வித் தகுதி முக்கியமான ஒன்றாக இருப்பதால் தற்போது இளந்தலைமுறை மாணவ, மாணவியரிடம் அதனைக் கற்கும் ஆர்வம் பிறந்துள்ளது நல்ல மாற்றம்.
கணினி யுகம்
இதுகுறித்து மதுரை மாவட்ட தட்டச்சு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் செயலாளரும் நாகமலை கனி ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் இயக்குநருமான கருணாகரன் கூறுகையில், "கணினி யுகம் என்று நாம் கூறிக் கொண்டாலும், தற்போது தட்டச்சுப் பயிற்சி குறித்த பார்வை மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது. வல்லரசு நாடான ரஷ்யாவில் இன்றைக்கும் அவர்களது அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் தங்களின் பதிவேடுகளைத் தயாரிப்பதற்கு தட்டச்சுப் பொறிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். காரணம் தகவல்களை ஹேக் செய்ய முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசே தட்டச்சுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும்கூட தமிழ்நாட்டிற்கு வந்து தட்டச்சு பயின்று அரசுத் தேர்வு எழுதிச் செல்கின்றனர். தமிழ்நாட்டில் பயின்றவர்களே இன்றைக்கு நாடாளுமன்றம், பிற மாநிலங்களின் சட்டப்பேரவைகள், அரசுத் துறைகளில் பணியில் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு தட்டச்சுக் கல்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார்.
அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் வணிகவியல் தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை, சற்றேறக்குறைய 2,200-க்கும் மேல் உள்ளன. அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தட்டச்சுக் கல்வியும் முக்கியத் தகுதியாக உள்ளது. ஆண்டு தோறும் மாநிலம் முழுவதும் சராசரியாக 4 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். இந்தத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறுகிறது.
கருணாகரன் மேலும் கூறுகையில், "டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் நுழைவுத்தேர்வு, முதன்மைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற இருவர் சமமான மதிப்பெண் பெற்றிருந்தனர். நேர்முகத் தேர்வின்போது, தட்டச்சு தெரிந்திருந்த நபருக்கே தகுதியின் அடிப்படையில் வேலை அளிக்கப்பட்டது. இது மிக அண்மையில் நடந்த உண்மை நிகழ்வாகும். தட்டச்சுக் கல்வி பெறுவதற்கு 8ஆம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது. அதேபோன்று சுருக்கெழுத்தர்களுக்கான பணியிடங்களும்கூட ஒன்றிய, மாநில அரசுகளில் நிறைய துறைகளில் காலியாகவே உள்ளன" என்கிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் மிகக் கடுமையான சூழலைச் சந்தித்த தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகள், தற்போதுதான் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. தற்போதைய மாணவர்கள் மத்தியிலும், தனியார் துறைகளில் பயில்கின்ற நபர்களிடத்தில் தட்டச்சுக் கல்வி கற்கும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுறுசுறுப்பான நிலை தட்டச்சுப் பள்ளிகளில் தென்படத் தொடங்கியுள்ளது ஆரோக்கியமான மாற்றமாகும்.
நினைவுத்திறன் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் குடும்பத் தலைவி சரண்யா கூறுகையில், "சரிசமமான மதிப்பெண் பெற்றிருக்கும் இருவருக்கு தட்டச்சு கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுகின்ற நிலையில், அரசுத் தேர்வுகளுக்காக நான் தட்டச்சு பயின்று வருகிறேன். மேலும் இதன் மூலமாக எனக்கு நினைவுத்திறன், மொழியறிவு அதிகரிப்பதை நான் முழுவதுமாக உணர்கிறேன்" என்கிறார்.