மதுரை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்! - சென்னை சென்ட்ரல் ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து வசதிக்காக, மதுரை வழியே இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே செய்தித்தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06049) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 22 சனிக்கிழமையன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 26 புதன்கிழமையன்று மாலை 5:50 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு அடுத்த நாள் அதிகாலை 04.10 மணிக்குச்செல்லும்.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம்-தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 8:45 மணிக்குப் புறப்படும் சென்னை - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06041) சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேஸ்வரத்துக்கு அடுத்த நாள் காலை 11 மணிக்குச்செல்லும்.
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமேஸ்வரம் - தாம்பரம் சிறப்பு ரயில் (06042) அக்டோபர் 24 திங்கட்கிழமையன்று மாலை 4:20 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 6:20 மணிக்கு தாம்பரம் செல்லும்" என்று மதுரை கோட்ட ரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுற்றுலாத்தலமாகும் தூத்துக்குடி வல்லநாடு வெளிமான் சரணாலயம்...!