மதுரை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; ''நான் 19.06.2023 அன்று பணியாளர்கள் தேர்வு ஆணையத் தலைவர் எஸ்.கிஷோருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதில் இரண்டு தேர்வுகள் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் (Selection posts, Phase XI, 2023) மற்றும் தேசியத் தேர்வு முகமையின் விஸ்வபாரதி, சாந்தி நிகேதன் தேர்வுகள் 27 & 28 ஜூன் 2023 - அதே தினங்களில் வருவதால் தேர்வர்கள் நலன் கருதி தேதிகளை மாற்றுமாறு எழுதி இருந்தேன். அதே போன்ற கோரிக்கையை தேசிய தேர்வு முகமையிடமும் வைத்திருந்தேன். ஒன்றிய பொதுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் (UPSC) அதனையொட்டிய இரண்டு நாட்களுக்குள்ளாக வருவதையும் குறிப்பிட்டு இருந்தேன்.
அதற்குப் பதில் அளித்துள்ள பணியாளர் தேர்வாணயத் தலைவர் எஸ்.கிஷோர் (DO HQ - C - 1107/ 5/ 2023 / C2 / 28.06.2023) தேர்வு அட்டவணை பல மாதங்களுக்கு முன்பாகவே தயாராகிவிட்டது. ஒரு தேர்வை தள்ளி வைத்தால் ஒட்டு மொத்த தேர்வுச்சுற்றுகளே தாமதமாகும்.
ஏற்கெனவே மனதளவில் தயாராகி உள்ள தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும்; தாமதமான தேர்வு முடிவுகளால் லட்சக்கணக்கான தேர்வர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, அதனால் தேர்வுகளை தள்ளி வைக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.