தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழடியை பாதுகாக்கத் தவறிவிட்டால் செங்கல் சூளைகளால் அழியும் - அமர்நாத் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை - amarnath ramakrishnan

மதுரை: கீழடி உள்ளிட்ட அதன் சுற்றுப்புறத்தில் உள்ள தொல்லியல் மேடுகளை பாதுகாக்க நாம் தவறிவிட்டால் அவை செங்கல் சூளைகளால் விரைவில் அழிவுக்கு உள்ளாக நேரிடும் என்று மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

keezhadi national seminar  world tamil sangam  உலகத்தமிழ்ச் சங்கம்  கீழடி கண்காட்சி  கீழடி கருத்தரங்கம்  மதுரை கீழடி கருத்தரங்கம்  அமர்நாத் ராமகிருஷ்ணன்  amarnath ramakrishnan  keezhadi national seminar amarnath ramakrishnan
கீழடியை பாதுகாக்கத் தவறி விட்டால் செங்கல் சூளைகளால் அழியும் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

By

Published : Dec 20, 2019, 4:57 PM IST

தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கீழடி குறித்த முதல் தேசிய கருத்தரங்கு இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவிருக்கிறது. இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களும் அறிஞர்களும் பங்கேற்று பல்வேறு கருத்துகளில் கீழடி குறித்து பேசுகின்றனர்.

இன்று தொடங்கிய கருத்தரங்கின் முதல் அமர்வின்போது மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தொன்மையும் பெருமையும்வாய்ந்த மதுரையை அகழாய்வு செய்ய வேண்டுமென்ற ஆவலும் விருப்பமும் எங்களுக்கு இருந்தது.

ஆனால், மதுரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்விடமாக இருந்துவருகின்ற காரணத்தால் அந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. அப்படி இருந்தும்கூட மதுரையின் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் தொல்லியல் சான்றுகளுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதனையடுத்து, அப்பகுதியிலிருந்த சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்ட பிறகு அதனை ஆய்வு செய்ய நாங்கள் பல்வேறு வகையிலும் முயன்றும் முடியவில்லை.

கீழடியை பாதுகாக்கத் தவறிவிட்டால் செங்கல் சூளைகளால் அழியும் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் பழந்தமிழ் தொல்லியல் மேடுகளில் கீழடி மிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனை தவறவிடாமல் நாம் மேலும் மேலும் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். சற்றேறக்குறைய 110 ஏக்கர் பரப்புள்ள கீழடி தொல்லியல் மேட்டினை நாம் பாதுகாக்கத் தவறிவிட்டால் செங்கல் சூளைகளால் அவை அழிய வாய்ப்பு உண்டு" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நிலவிய தொல்பழங்கால நகர நாகரிகத்திற்கு கீழடி மிகச்சிறந்த சான்று. சங்க இலக்கியக் காலத்தை நாம் கிமு 300 லிருந்து கிபி 300 வரை கால பகுப்பு செய்துள்ளோம். கீழடியில் நடைபெற்ற ஆய்வுகளுக்கு பிறகு, இந்தக் காலப் பகுப்பு முறையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

வைகை நதிக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லியல் மேடுகள் உள்ளன - அமர்நாத் ராமகிருஷ்ணன்

வைகை ஆற்றங்கரை நாகரிகத்தைப் பொறுத்தவரை ஆறு தொடங்கும் வருஷநாடு பகுதியிலிருந்து ராமநாதபுரம் வரை ஆற்றின் இரண்டு புறங்களிலும் உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம்வரை நிறைய தொல்லியல் மேடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் கணக்கில் எடுத்து நாம் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இன்று நடைபெறும் பல்வேறு அமர்வுகளில் தொல்லியல் அறிஞர்கள் மார்க்சிய காந்தி, சாந்தலிங்கம் செல்வகுமார், கேரள மாநிலம் பட்டணம் அகழாய்வு மேற்கொண்டுவரும் அறிஞர் பி.ஜே. செரியன், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ராஜன், மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, புனேவில் உள்ள டெக்கான் கல்லூரியில் தொல்லியல் துறை முன்னாள் தலைவர் மொகந்தி, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நாகசாமி, புதுச்சேரி பிரென்ச் கல்விக்கூட வருகைப் பேராசிரியர் சுப்பராயலு உள்ளிட்ட பலர் பேசுகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? - சீமான் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details