மதுரை:தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்த்த லூயிஸ் சோபியா என்ற மாணவி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2019ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் வந்தார்.
விமான நிலையத்தில் இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கோஷமிட்டேன். அப்போது தமிழிசை செளந்திரராஜன் என்னை மிரட்டும் நோக்கில், தகாத வார்த்தைகளால் திட்டினார். அதேநேரம் அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். பின்னர் அவரது புகாரின்பேரில் காவல் துறையினர் என் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
எனவே, இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவின் முந்தைய விசாரணையில், புகார்தாரரான தமிழிசை செளந்திரராஜன் தற்போது ஆளுநராக இருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டு, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார்.