மதுரை: திருச்சியில் டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் 24 வருடங்கள் சிறையில் உள்ள இருவரை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் இருவருக்கும் மூன்று மாதம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி நகர பாஜக தலைவராக இருந்தவர் டாக்டர் ஸ்ரீதர் கடந்த 1999ல் கிளினிக்கில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த வழக்கை விசாரித்த திருச்சி விரைவு நீதிமன்றம் ஜாகீர் உசேன், தடா மூசா, ரஹ்மத்துல்லா கான், ஷேக் ஜிந்தா மதார், உள்ளிட்ட பலருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஷாஜகானுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இதில், ரஹ்மத்துல்லா கானை விடுவிக்கக் கோரி, நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த அவரது தாய் சீனத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இதேபோல் நெல்லையைச் சேர்ந்த மைதீன்பீவி, தனது மகன் ஷேக் ஜிந்தா மதாரை விடுதலை செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவில், "என் மகன் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளார், கடந்த 2008ல் முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு 7 ஆண்டு நிறைவு செய்த 1406 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். 2018ல் 20 ஆண்டுகளைக் கடந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவற்றில் என் மகன் விடுதலை செய்யப்படவில்லை. எனவே, என் மகனை விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் எஸ்.எம்.ஏ.ஜின்னா கூறும்போது, இரண்டு கைதிகளும் 24 வருடம் சிறையிலிருந்து வருகின்றனர். இவர்கள் நன்னடத்தையுடன் செயல்பட்டு உள்ளார்கள். இதே வழக்கில் உமர்பார்க் என்பவர் உச்ச நீதிமன்றத்தால் 6 மாத கால பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் நன்னடத்தை கருத்தில் கொண்டு விடுதலை செய்யலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாரயன்ன் கமிட்டி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் மூன்று மாத கால விடுப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், மனுதாரர்களின் மகன்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக அரசு முடிவெடுத்து, ஆளுநருக்குப் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் பரிந்துரையின் மீத எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். சிலருக்கு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பரோல் வழங்கியுள்ளது. இருவருக்கும் பரோல் வழங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவருக்கும் 3 மாத காலம் பரோல் வழங்கிய நீதிபதிகள், ரஹ்மத்துல்லாகான் மேலப்பாளையம் காவல் நிலையத்திலும், ஷேக்ஜிந்தா மதார் பத்தமடை காவல் நிலையத்திலும் மாதம் ஒரு முறை ஆஜராக வேண்டு என நிபந்தனையுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மாெழியில் மாெழியாக்கம் செய்யும் சென்னை ஐஐடி..!