மதுரை:நீர், நிலம், காற்று, மலை என அனைத்து வளங்களும் கண் முன்னே பல்வேறு நோக்கங்களுக்காக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பல்வேறு வகையான மரங்களும் பேரழிவைச் சந்தித்து வருகின்றது என்பது கண்கூடு. அரிய வகை மரங்களைக் காப்பாற்றும் முயற்சியோடு, மரங்கள் குறித்து பொதுமக்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையிலுள்ள ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் என்ற அமைப்பு 'மரமும் மனிதனும்' எனும் தலைப்பில் மரக் கண்காட்சி ஒன்றை நடத்தியது.
இது குறித்து ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் திட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ள ஹரிகிருஷ்ணன் கூறுகையில், “இந்தக் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அரிய வகை மரக்கன்றுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிக அரிதான விதைகளையும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.
இந்த அமைப்பின் தன்னார்வலர் தங்கம் கூறுகையில், “பொதுமக்கள் மட்டுமன்றி பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியரும் மிக ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இமயமலையிலிருந்து இந்தியக் காடுகளில் உள்ள அரிய வகை மரங்களின் கன்றுகளை இயன்றவரைக் கொண்டு வந்து இங்கே வைத்துள்ளோம். வழக்கமாகப் பிற பண்ணைகளில் குரோட்டன்ஸ் என்று சொல்லக்கூடிய கன்றுகளே இருக்கும். இங்கே நாட்டு மரக்கன்றுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்” என்கிறார்.
மேலும் அவர், “பொதுவாகப் பறவைகள், விலங்குகள் மூலமாக மரங்கள் உள்ளிட்ட தாவர, செடி, கொடி வகைகள் பிற இடங்களுக்கும் பரவுகின்றன. கடுக்காய், இலுப்பை, செந்தூரம், ஜாதிக்காய், செம்மரம் போன்ற அரிய வகை மரக்கன்றுகள் மற்றும் அதன் விதைகளைச் சேகரித்து அதன் முக்கியத்துவத்தையும் இங்கே வருபவர்களுக்கு உணர்த்துகின்றோம். இதுபோன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம் நாம் சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கலாம். வீட்டுப் பயன்பாட்டிற்கான தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்கிறார்.
அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மரங்களை நட்டு தமிழக அரசின் பாராட்டைப் பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரம் கருணாநிதி கூறுகையில், “ஒவ்வொரு மரமும் ஒவ்வொருவிதமான பயன்களைத் தருகிறது. ஒரு நாடு நல்ல வளத்துடன் திகழ வேண்டுமானால் மரங்களின் இருப்பு மிகவும் அவசியம். நாம் காடுகளைத் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறோம். 3ஆம் உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்” என்றார்.