மதுரை:அதிமுகவின் சார்பாக மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ரயில், கார், வேன்கள் மூலம் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருகை தந்திருந்தனர்.
மாநாடு நடக்கும் மதுரை வலையங்குளம் பகுதிக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பே 10,000 சமையல் கலைஞர்கள் அதிமுக மாநாட்டு பந்தலுக்கு வந்துர் மும்மரமாக சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஏ,பி,சி என மூன்று இடங்களில் தொண்டர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு உணவுக்கூடங்களிலும் 300 கவுண்டர்கள் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.
புளியோதரை, சாம்பார் சாதம், தக்காளி சாதம் என மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், அதிமுக நிர்வாகிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. ஆனால் உணவுகள் சரியில்லை எனவும் சரியாக வேக வைக்கப்படவில்லை என கூறி தொண்டர்கள் பலர் உணவுகளை கீழே கொட்ட தொடங்கினர். இதனால் பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, நேற்றைய மாநாட்டில் தயாரான உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டுத் திடலில் கொட்டப்பட்டு உள்ளது.