மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் தனது குடும்பத்தினருடன் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள் அவரது காரைத் தடுத்து நிறுத்தி கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர்.
தான் திருமங்கலத்தில்தான் வசிப்பதாகவும் உள்ளூரை சேர்ந்தவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவை இல்லை என்பதால் கட்டணம் செலுத்த முடியாது என பத்மநாபன் தெரிவித்துள்ளார். அதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள், வாகனம் சென்னை பதிவு எண் கொண்டதாக உள்ளதால், அதற்குரிய ஆதாரத்தை காண்பித்து வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறினர்.
அதற்கு வாகன உரிமையாளர் தான் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான ஆதாரத்தை காண்பித்ததாகவும், இதனை ஏற்க மறுத்ததால் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இருதரப்புக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.