மதுரை: மதுரை என்றாலே மல்லிகை பூ தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட மதுரை மல்லி, எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாட்டுத்தாவணி மலர் வணிக வளாகத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
அதுமட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்திலிருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது. மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்தைப் பெற்றுள்ள மதுரை மல்லிகை, அதன் மணம், தன்மை ஆகியவற்றில் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு மதுரையிலிருந்து மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிலோ ரூபாய் 1,800-க்கு மல்லி விற்பனையாகி வந்தது. தற்போது திருக்கார்த்திகை முடிந்த பின்னரும் மதுரை மல்லிகை, இன்றைய நிலவரப்படி கிலோ ரூபாய் 1,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது கடந்த சில நாட்களாக, மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வருவதாலும், விளைச்சல் குறைந்து இருப்பதாலும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
இதனால் பிச்சி ரூ.200, முல்லை ரூ.200, சம்பங்கி ரூ.120, செண்டு மல்லி ரூ.100, அரளி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தொடர் மழை காரணமாக குறைந்துள்ள உற்பத்தியால், கடந்த சில நாட்களாகவே இந்த விலை நீடித்து வருகிறது என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பம்மல் பிரதான சாலையில் கடல் போல் காட்சியளிக்கும் மழை நீர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி!