தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவால் முன் வைக்கப்பட்டு 70-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டு, உலக நாடுகளுடன் இந்தியாவும் கொண்டாடி வருகிறது. இது இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாக மற்றும் உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திறன் கொண்டது.
இந்தியாவில் சிறுதானிய உற்பத்தி 2015-16 ஆம் ஆண்டில் 14.52 மில்லியன் டன்னிலிருந்து 2020-21 ஆம் ஆண்டில் 18.02 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. உலகளாவிய சிறுதானிய சந்தை 2021 மற்றும் 2026 க்கு இடையில் CAGR (கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்) 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலும், பிற நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறையினர் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். சிறுதானியங்களில் ஏராளமான புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் உள்ளதால் இது ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகின்றது.