மதுரை: தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக மேய்ச்சல் சார்ந்து இயங்கக்கூடிய சமூக மக்கள், தங்கள் கால்நடைகளை இழந்து கடும் வாழ்வாதார சிக்கலை சந்தித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ்காந்தி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அவர் கூறியதாவது, "தென்மாவட்டங்களில் பெய்த பெருமழை மிகப்பெரிய இயற்கைப் பேரிடர். பல்வேறு தரப்பு மக்களும் தம்முடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மனிதர்களுக்கு அடுத்தபடியாக பெரும் எண்ணிக்கையில் கால்நடைகள் இறந்துள்ளன. அதிலும், குறிப்பாக கால்நடைகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழக்கூடிய கிடைக்காரர்கள் என்று சொல்லக்கூடிய மேய்ச்சல் சமூக மக்கள் மிகப்பெரிய அளவில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கிடை போட்டு வாழக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல், கால்நடைகள் அனைத்தும் பசியால் இறந்திருக்கின்றன. தமிழக அரசு மிக விரிவான முறையில் களஆய்வு செய்து, கால்நடைகள் குறித்த கணக்கெடுப்பினை நடத்தி, எண்ணிக்கை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஏனென்றால், தேசியப் பேரிடர் மேலாண்மையில் மிகக்குறைந்த அளவு கால்நடை இழப்பிற்கு மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான கால்நடைகளை இழந்த நபருக்கு இழப்பீடு பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் சமூகத்தின் நிலை, வாழ்வாதாரம் பற்றிய பார்வையோடு இழப்பீடுகளை, உதவிகளை வழங்க வேண்டும்.
மேய்ச்சல் சமூக மக்கள் இந்த பேரிடரில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். ஏறக்குறைய சொந்த நிலத்திலேயே அகதியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தனது பத்திரிகையாளர் சந்திப்பில் மிகக் குறைவான எண்ணிக்கையில் கால்நடைகளின் இறப்புகள் குறித்து பகிர்ந்திருக்கிறார். போதிய தகவல்களைச் சேகரித்து, விரிவான கள ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களின் இழப்புகளை பதிவு செய்ய வேண்டும்.