இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாள்களில் ஒரு கோடியைத் தொட்டுவிடும்.
தொற்று உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியவுடன், அந்த நாடுகளிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வருவதற்கான 'வந்தே பாரத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் நாடு திரும்ப ஆர்வம் காட்டினர். அதற்குரிய கட்டணத்தை வசூல் செய்து ஏர் இந்தியா விமானங்கள் இந்தியர்களை திரும்ப கொண்டுவந்து சேர்க்கின்றன .
தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்ப லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பதிவு செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 34 லட்சம். இதில் மலையாளிகளின் எண்ணிக்கை 10 லட்சம். அவர்களுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் 4.5 லட்சம் தமிழர்கள் இருக்கின்றனர்.
வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் செய்வதறியாது தமிழர்கள் சிக்கித் திகைத்து நிற்கின்றனர். பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டுவரும் 'வந்தே பாரத்' திட்டத்தில் இதுவரை ஆயிரத்து 175 முறை விமானங்களை இந்திய அரசு இயக்கியுள்ளது. இவற்றுள் 279 விமானங்கள் கேரளாவிற்கு மட்டும் இயக்கப்பட்டன. இந்த 279 பயணத்திலும் 238 விமானங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டுள்ளன.
ஜூன் 4ஆம் தேதிவரை சுமார் 25,000 மலையாளிகள் கேரளா திரும்பியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவற்றுள் 20,000 பேர் வளைகுடாவிலிருந்து மட்டும் திரும்பியுள்ளனர். மொத்தமாக 10,000 பேர் கேரளாவிற்குத் திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்கு இதுவரை 73 விமானங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் 27 விமானங்கள் மட்டுமே வளைகுடா நாடுகளிலிருந்து மக்களைத் திரும்ப அழைத்துவந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட விமானச் சேவையின் மூலமாக இதுவரை மொத்தமாக 14,000 தமிழர்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளனர். அவற்றுள் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பிவந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 5,000 மட்டுமே. அதாவது ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே. ஏன் இந்த பாரபட்சம்?
கேரளா மக்களை அதிக எண்ணிக்கையில் திரும்ப அழைத்துவர கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்துகிறது. 'வந்தே பாரத்' திட்டத்தில் அதிக விமானங்களைக் கோரியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசோ இதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. உலகெங்கும் பதிவுசெய்து காத்திருக்கும் தமிழர்களை அழைத்துவர எந்த முன் முயற்சியும் மாநில அரசிடம் இல்லை.
அதனால் மிகக்குறைவான விமானங்களே தமிழ்நாட்டிற்கு இயக்கப்படுகின்றன. கேரளாவுக்கு இயக்கப்பட்டுள்ள விமானங்களில் நான்கில் ஒரு பங்கு விமானங்களே இங்கு இயக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்து தமிழ்நாடு வர விரும்பியவர்கள் மாநிலத்திற்கு வந்துசேர இரண்டு மாதங்களுக்கு மேலாகும்.