தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகக்கவசம் அணியாத ஆட்டோ ஓட்டுநர் போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் - அண்மை செய்திகள்

மதுரை: முகக்கவசம் அணியாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநர், காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Jul 3, 2021, 12:12 PM IST

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஹபீப் முகமது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி ஆறுமுகநேரி காவல் நிலைய பெண் காவலர்கள் இருவர் என்னை ’ஏன் முகக்கவசம் அணியவில்லை?’ என விசாரித்தனர். அப்போது அங்கு மேலும் சில காவலர்கள் வந்து என்னை மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரண்டு மணி நேரம் கடுமையாகத் தாக்கினர்.

தொடர்ந்து என் உடல் நிலை மோசமடைந்ததால், காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் கூறினர். ஆனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் காவலர்கள் தடுத்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

என்னைத் தாக்கிய காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து என் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் வழக்கை திரும்ப பெறக்கோரி காவலர்கள் தொடர்ந்து என்னை மிரட்டி வருகின்றனர்.

எனவே, என் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று (ஜூலை.02) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், ஆர்.கருணாநிதி ஆகியோர் வாதிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அம்மா உணவகத்தில் சத்துணவு வழங்கும் திட்டம்: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details