தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது’ - நீர் திருட்டு

மதுரை: கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது. இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால் அனைவரும் பாதிக்கப்படுவோம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

madurai
madurai

By

Published : Mar 5, 2020, 11:04 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம், கருங்காட்டன்குளம் விவசாயிகள் நல சங்க தலைவர் விஜயராஜன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், முல்லைப் பெரியாறு அணையை கட்டுவதற்கு முன்பு, வைரவனாறு, சுருளியாறு ஆகியவை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசன வசதி பெற்று வந்தது. நெல் விவசாயம் மிக சிறப்பாக நடைபெற்றது.

தற்போது சட்டவிரோதமாக தண்ணீர் அபகரிப்பது அதிகரித்துள்ளது. பெரியார் நீர் பாசன கால்வாய் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆயக்கட்டு நிலங்களிலிருந்தும் நீரை குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக எடுத்துச் செல்கின்றனர். ஆகவே அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை பெரியாற்றுப் பாசன கால்வாயில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் மற்றும் ஆற்றுநீர் திருடப்படுவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீரை திருடுவதோடு, சில கண்மாய்களில் இருந்தும் தண்ணீர் திருடப்படுகிறது. அப்பகுதியில் இருக்கும் செல்வாக்குமிக்க நபர்களின் கீழ், 10க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுரையில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்னை தொடங்கிவிட்டது. இதுபோல தண்ணீர் திருட்டு தொடர்ந்தால், மதுரை மிகப்பெரும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், கொரோனா வைரஸ் நம் வாசற்படியில்தான் உள்ளது. இதுபோல் இயற்கையை சுரண்டுவது தொடர்ந்தால், அனைவரும் பாதிக்கப்படுவோம் என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, தண்ணீர் திருட்டு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேனி மாவட்ட ஆட்சியர், மதுரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details