உயர் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுத்திட மார்ச் 4ஆம் தேதி அன்று அரசு ஆணை (அரசு ஆணை எண்: 48) வெளியிட்டது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம். ஜெகதீசன் தலைவராகவும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ப. ராமசாமி, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மருதமுத்து ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழு அறிவிக்கப்பட்ட உடனே பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. பிரச்னைகளுக்குரிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தெரிந்தெடுக்கும் குழுவின் அதிகாரப்பூர்வ அலுவலராக முனைவர் ஜி. ரத்தினசபாபதி நியமிக்கப்பட்டார். 177 பேர் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். தெரிந்தெடுக்கும் குழுவினருடன் வரும் ஜூலை 28ஆம் தேதி அன்று ஆன்லைன் மூலம் நேர்காணலில் பங்கேற்குமாறு விண்ணப்பித்திருந்த நபர்களில் 12 பேருக்கு மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சிறந்த கல்வியாளர்கள் பலரும் இந்தப் பட்டியலில் இல்லாமலிருப்பது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.