மதுரை:மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, “திருநங்கைகள் உள்ளிட்ட இதர மாற்று பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் கடந்த 2014-இல் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி செயல்படுத்துமாறு உத்தரவிட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, உரிய மருத்துவ வசதி, தனி கழிப்பறை உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை அளித்தது. இவற்றை மத்திய மற்றும் மாநில அரசுகள் 6 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டுமென கூறியிருந்தது.
ஆனால் எந்த அரசுகளும் இதனை கடைபிடிக்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு முறையாக அமல்படுத்தியுள்ளது. திருநங்கைகள் உள்ளிட்ட மாற்று பாலினத்தவருக்கு தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டு, தனி அடையாள அட்டை வழங்கப்படுகிறது.