தமிழ்நாடு

tamil nadu

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு

By

Published : Aug 31, 2021, 12:46 PM IST

நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் வகுப்புகளைக் கவனிக்க அனுமதிக்கக் கோரிய வழக்கு விசாரணையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனக் கட்டாயம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வஹாப், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், "செப்டம்பர் 1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கரோனா நோய்த்தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாகப் பயில்வதற்கும், பயிற்றுவிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றாகப் பழகிவிட்ட சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், கல்லூரிகளை திறக்க வேண்டும் எனவும் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே கரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில்கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளைக் கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், "பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறை சார்பில், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் முறையாகப் பின்பற்றப்படும்.

50 விழுக்காடு குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அனைத்து வல்லுநர்களுடன் ஆலோசித்தே இத்தகைய முடிவை எடுத்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், நேரடியாக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அரசுத் தரப்பில், மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:பெற்றோர்கள் பயப்படாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் - அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details