மதுரை: நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக பாஜக பிரமுகர் வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர்.
நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி, மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட் பெற்று, அதனை விற்பனை செய்து முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்து வருகின்றோம்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் சொத்துக்கள், நிலங்கள் ஏராளமாக உள்ளன.
எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரி செய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி, “நியோமாக்ஸ் நிறுவனம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நிலத்தை பங்கீடு செய்வது குறித்து மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. 32,048 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என நிறுவனமே உத்தேசமாகத்தான் குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில் எத்தனை முதலீட்டாளர்கள் என்பது முழுமையான புலன் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.