தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரலேகாவுக்கு 'மாநில இளைஞர் விருது' அறிவிப்பு! - சுதந்திர தினம்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரலேகாவுக்கு “மாநில இளைஞர் விருது” வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

state youth award
சமூக ஆர்வலர் சந்திரலேகா

By

Published : Aug 13, 2023, 10:31 AM IST

மதுரை:மதுரை மாவட்டம், ஏழுமலையைச் சேர்ந்தவர் சந்திரலேகா. இவர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளங்கலை சமூகசேவை மற்றும் முதுகலை சமூகசேவை பயின்றவர். தன்னுடைய கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூர் அருகேயுள்ள அழகுசிறையில் அமைந்துள்ள கிளரீசியன் கருணை இல்லத்தில் பணியாற்றி வருகிறார்.

மேலும், சுற்றுச்சூழல், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் மேம்பாடு, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண் சிசுக்கொலை தடுப்பு விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு சமூகப் பணிகளை மேற்கொண்டவர். இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சமூக வளர்ச்சிக்காகப் பாடுபடும் இளைஞர்களைக் கண்டறிந்து வழங்கப்படும் முதலமைச்சரின் “மாநில இளைஞர் விருது”-க்கு இந்த ஆண்டு சந்திரலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.

மேலும், பள்ளி அளவில் மிகச் சிறந்த தடகள வீராங்கனையாகத் திகழ்ந்த சந்திரலேகா, சமூக சேவையின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, அதனை விட்டுவிட்டு முழு நேரம் சமூக மேம்பாட்டுப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அதற்காகவே தனது சமூக சேவைக்கான சோஷியல் ஒர்க் (பி.எஸ்.டபிள்யூ மற்றும் எம்.எஸ்.டபிள்யூ) ஆகிய படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பயின்றுள்ளார்.

மேலும், தனது பெற்றோரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாகவே தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார். தன் ஊரைச் சுற்றி இதுவரை 5 ஆயிரத்து 300 மரங்களை நட்டு பராமரித்து வளர்த்துக் காட்டியிருப்பதை மிகப் பெருமையாக அவர் கருதுகிறார். அதேபோன்று 2 ஆயிரத்து 500 பனை விதைகள் நடவும் செய்துள்ளார். சந்திரலேகாவின் சமூக சேவைகளைப் பாராட்டி இதுவரை 41 விருதுகளை இவருக்கு பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன.

இந்த நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு தொலைபேசி வாயிலாக சந்திரலேகா அளித்த பேட்டியில், “கல்லூரி பயிலும்போது எனது தந்தை செலவுக்குத் தருகின்ற பணத்தை சேமித்து வைத்து, குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உதவுவேன். அந்த நேரத்தில் என்னுடைய சக மாணவ, மாணவியர் மட்டுமன்றி கல்லூரிப் பேராசிரியர்களும் உதவி செய்வார்கள்.

இது போன்ற சேவைகளின்போது எனக்குள் ஏற்படுகின்ற இனம் புரியாத மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல இயலாது. ஆதரவற்றோருக்கான இல்லம் தொடங்கி என்னால் முடிந்தவரை சேவை செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம். மனிதநேயம் அற்றுப்போகின்ற காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினருக்கு மட்டுமன்றி, பெற்றோர்களுக்கும் தர வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு வழங்க இருக்கின்ற இந்த விருது, என்னை மேலும் உற்சாகம் கொள்ளச் செய்கிறது. என்னைப் போன்று சேவை நோக்கம் கொண்ட இளைஞர்களை உருவாக்கி, நம் சமூகத்திற்கு வழங்குவதும் எனது கடமையாகக் கொண்டிருக்கிறேன். அதையும் நிறைவேற்றிக் காட்டுவேன்” என்றார்.

இதையும் படிங்க:"மாணவர்களின் தனித் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்!

ABOUT THE AUTHOR

...view details