மதுரை: தெற்காசியாவிலேயே முதன்முறையாக 'ராவுல் வாலன்பெர்க்' எனும் விருதைப் பெற்றுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் 'எவிடென்ஸ்' கதிர் என்ற வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
அப்போது அவர் பேசியதாவது, "ஐரோப்பாவிலுள்ள 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கவுன்சில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அமைப்பாகும். மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பணி செய்பவர்களைத் தேர்வு செய்து இந்த விருதை வழங்கி வருகிறார்கள்.
தற்போது 5ஆவது முறையாக, தெற்காசியாவிலேயே முதலாவதாக இந்த விருது எனக்குக் கிடைத்துள்ளது என்பது 'சாட்சியம்' அமைப்பு மேற்கொண்ட பணிகளுக்குக் கிடைத்த பெருமையாகும்.
மனித உரிமை மீறல்
கடந்த ஜனவரி 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற இணையவழி நிகழ்ச்சியில், ராவுல் வாலன்பெர்க் விருதுக்காக மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி 'வின்சென்ட் ராஜ் ஆரோக்கியசாமி' தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தபோது, மொத்த அரங்கமும் ஒரு கணம் அதிர்ந்துதான் போனது.
ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதோர் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான போராட்டத்தில் தன்னை முழுவதுமாக ஒப்படைத்துக் கொண்டு, இதுவரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் நிகழ்வுகளில் 25 ஆயிரம் பேரை காப்பாற்றியுள்ளார் என்பது அத்தனை எளிதானது அல்ல.
அர்ப்பணிப்பு உணர்வு தேவை
சமூகப் பணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். 3 ஆயிரம் மனித உரிமை மீறல் நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளேன். 25 ஆயிரம் பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இதற்காக பல்வேறு முறை தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன்.
கொல்வதற்கும் முயன்றிருக்கிறார்கள். மனித உரிமைப் பணி என்பது சவால் நிறைந்தததாகும். அதே சமயத்தில் சகிப்புத்தன்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் அதிகம் தேவைப்படுகின்ற பணியாகும். ஆகையால் இந்த விருது பாதுகாப்பையும், தெம்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வருகின்ற இளையதலைமுறையினருக்கும் மனித உரிமைப் பணிகளின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
ராவுல் வாலன்பெர்க்
இரண்டாம் உலகப்போரின்போது ஹங்கேரி யூதர்கள் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றியவர் ஸ்வீடனைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ராவுல் வாலன்பெர்க். இதற்காக நடைபெற்ற போராட்டத்தின் அடிப்படையில் கடந்த 1945ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார்.