மதுரை:மாடக்குளம் பகுதியில் நடைபெற்ற தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் இன்று (ஜூன் 15) பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ”தமிழக முதலமைச்சர் இன்று காலையில் வரம்பு மீறி பேசியதாகவு, தனது தங்கை கனிமொழி கைது செய்யப்பட்டபோது கூட இந்த அளவுக்குக் கோபப்படாத முதலமைச்சர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு கோபம் கொள்கிறார் என்றால், அவர்தான் திமுகவின் கருவூலம் என்பது உறுதியாகி உள்ளது என்று கடுமையாக சாடினார். செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பிறகு ஸ்டாலின் முதலமைச்சரைப் போல நடந்து கொள்ளவில்லை என்றும் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் மருத்துவமனைக்கே சென்று ஏன் செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும்? என்று கேள்வியெழுப்பினார். மேலும், எந்த ஒரு சாமானிய மக்களும் செந்தில் பாலாஜியின் கைதை தவறு எனக் கூறவில்லை என்றார்.
இன்றைய பேச்சில் கூட, முதலமைச்சரின் பேச்சு பா.ஜ.க தொண்டர்களை மிரட்டுவது போன்றே உள்ளதாகவும், எதற்கும் நாங்களும் தயாராகவே உள்ளோம் என்று கூறிய அவர், எங்கள் தொண்டர்கள் மீது கை வைத்துப் பாருங்கள் என முதலமைச்சருக்கு நான் பதில் சவால் விடுகிறேன் என்று தெரிவித்தார். தி.மு.க குண்டர்கள் வீதிக்கு வருவது தமிழகத்திற்கு புதிது அல்ல என்றும் நிலைமை கை மீறினால் நாங்கள் கோட்டைக்கே வருவோம் என்றும் நீங்கள் கொடுத்தால் பதிலுக்கு நாங்களும் கொடுப்போம் என்றும் கூறினார். பழைய பா.ஜ.க அல்ல; தனது கோபத்தை ஊழல் செய்த அமைச்சர் மீது காட்டாமல் பா.ஜ.க தொண்டர்கள் மீது காட்டுவது என்ன நியாயம்? என்று மீண்டும் கேள்வியெழுப்பினார்.
மேலும் பேசிய அவர், டி.ஆர்.பாலு என் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக தயாராக உள்ளதாகவும், மனித உரிமை ஆணைய தலைவரை தங்கள் கட்சியின் உறுப்பினரைப் போன்று தி.மு.க. பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்தால், அது பா.ஜ.க-வுக்கு தான் லாபம் என்றார்.