மதுரை: திருநெல்வேலி டவுனில் உள்ள சாப்டர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் கடந்த டிச. 17ஆம் தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன், சுதீஸ், விஸ்வரஞ்சன் ஆகிய 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் 3 மாணவர்கள் படுகாயமும் 2 மாணவர்கள் லேசான காயமும் அடைந்தனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக சக மாணவர்கள் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் சாமுவேல் செல்வகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியை ஞான செல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி உள்ளிட்ட 3 பேர் மீது நெல்லை சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.